

பெரும்பாலானோர் தினமும் 8 முதல் 9 மணி நேரம் வேலை செய்கிறார்கள். குடும்பத்தினர், நண்பர்களைவிட பணியிடத்தில் அதிக நேரம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. இதனால், ஆரோக்கியமான பணியிடச் சூழலை உறுதிப்படுத்துவது அவசியம். பாலினப் பாகுபாடு, பாரபட்சமாக நடத்தப்படுதல், சிறுமைப்படுத்தப்படுதல் ஆகியவற்றை எதிர்கொள்ளும்போது பணியிடச் சூழல் கசப்பாகக்கூடும். ஆரோக்கியமற்ற சூழலால் உடல்நலம், மனநலம் பாதிப்புக்குள்ளாகும். இந்த நிலையிலிருந்து விடுபட சில உத்திகளைக் கையாளலாம்.
ஆரோக்கியமற்ற பணிச்சூழல் என்பது என்ன?
# பணியின்போது எல்லாவற்றையும் சகித்துகொள்வது. இது தொடர்ந்தால் பின்பு பெரிய பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.
# உயரதிகாரிகள் அல்லது சக ஊழி யர்களின் கசப்பான நடவடிக்கைகள்.
# திறமை இருந்தும் வாய்ப்புத் தர மறுப்பது, வளர்ச்சியை முடக்குவது, பாராட்ட மறுப்பது, குறைகளைப் பூதாகரமாக்குவது, விமர்சனங்களைப் புறந்தள்ளுவது போன்ற செயல்களால் பணியிடச் சூழல் அதிருப்தியை உருவாக்கலாம். இது போன்று இன்னும் சில மாறுபட்ட நடவடிக்கைகளை கண்டால் விழித்துக்கொள்ள வேண்டும்.
அவை:
# புறம் பேசுதல்
# சிறுமைப்படுத்துதல்
# பாரபட்சம் காட்டுதல்
# வெளிப்படைத்தன்மை இல்லாத பேச்சு
# பணிச்சுமை பற்றி பேசாதிருத்தல்l அடிக்கடி பணியாளர் மாற்றங்கள்
என்ன நேரும்? - ஆரோக்கியமற்ற பணியிடச் சூழலால் ஊழியர்களுக்கு மட்டும் பிரச்சினை கிடையாது. அது ஒட்டுமொத்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் குந்தகம் விளைவிக்கும். இதனால், மனதளவில் சோர்வு உண்டாகி பணிகளை முடக்கும். இதைச் சீரமைக்காவிட்டால் அணியின் ஒட்டுமொத்த பணியிலும் எதிரொலித்து சிக்கலை அதிகரிக்கும்.
என்ன செய்யலாம்?
# வேலையைப் பாதிக்கும் செயல்கள், வேலை சாராத பேச்சுக்களைத் தவிர்க்கலாம்.
# அதில் சகப் பணியாளர் ஆர்வமாக இருந்தால், அவரிடமிருந்து விலகி இருக்கலாம்.
# பணியிடத்தில் சகப் பணியாளர் என்பதைத் தாண்டி நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.
# பணியிடத்தில் நடைபெறும் எதிர்மறை விஷயங்களை ஆவணப்படுத்துங்கள். எல்லை மீறிய பிரச்சினை எனும்போது புகார் அளிக்க இந்த ஆவணங்கள் பயன்படும்.
# கசப்பான பணியிடச் சூழலை சமாளிக்க பணியிடத்தை விட்டு வெளியேறுவது மட்டுமே தீர்வு அல்ல. ஒவ்வோர் இடத்திலும் இதுபோன்ற பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடலாம்.
# முதலில் பணியிடம் ஆரோக்கியமற்ற முறையில் இருந்தால், சில முன்னெடுப்புகள் மூலம் சீரமைக்க முயல வேண்டும். அது முடியாதபட்சத்தில், வேறு பணிக்கு மாறுவது பற்றி திட்டமிடலாம்.
மாற்றத்துக்கு என்ன வழி?
# பணியிடச் சூழலால் மனதளவில் பாதிக்கப்பட்டி ருக்கும் சக பணியாளருக்கு ஆதரவு அளிக்கலாம். இதிலி ருந்து விடுபடுவதற்கான உத்திகளை அவர்களிடம் பகிரலாம்.
# ஒருவர் மனதளவில் பாதிக்கப்பட்டதில் உங்களுக்கும் பங்கு இருந்தால் அவற்றை திருத்திக்கொள்ளலாம்.
# ஆரோக்கியமான பணியிடச் சூழலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடலாம். இதுபோன்ற எண்ணம் கொண்டவர்களுடன் நட்புப் பாராட்டி கூட்டாக இணைந்து பணியிடச்சூழலை மாற்றலாம்.