

சொந்தமாக ஒரு நிலம் வாங்கி, அதில் நம்கனவு வீட்டை கட்ட வேண்டும் என்பது பெரும்பாலரின் ஆசையாகும். ஆனால், ஆள்பற்றாக்குறை, கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் காலதாமதம் ஆகியவை இன்றைக்கு வீடுகட்டுபவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால்களாகும். வழக்கமான கான்கிரீட் முறையில் ஒரு வீட்டை கட்டிமுடிக்க குறைந்தது ஓராண்டாகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைத்து வெறும் 3 மாதங்களில் முழு வீட்டையும், அதிக உறுதியுடன் கட்டி முடிக்க தற்போதைய எல்ஜிஎஸ்எப் (Light Gauge Steel Framing) மற்றும் சிஎப்எஸ் (Cold Formed Steel) தொழில்நுட்பங்கள் வழிசெய்கின்றன.
எல்ஜிஎஸ்எப்
வழக்கமான கட்டுமானத்தில் வீட்டின் எடையை தாங்க பெரிய கான்கிரீட் தூண்களும், செங்கல் சுவர்களும் பயன்படுகின்றன. ஆனால், இந்த முறையில் வீட்டின் முழு அஸ்திவாரம் மற்றும் கட்டமைப்பு, தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அபார வலிமை கொண்ட எஃகு சட்டங்களால் (Steel Frames) உருவாக்கப்படுகிறது.
இதை குளிர்ந்த நிலையில் வார்க்கப்பட்ட எஃகு(சிஎப்எஸ்) என்றழைப்பர். இரும்பைக் கொதிக்க வைக்காமல், அறை வெப்ப நிலையிலேயே 1 மிமீ முதல் 3 மிமீ தடிமனில் இயந்திரங்கள் மூலம் மடித்து இவை உருவாக்கப்படுகின்றன. இதன் மீதான அலு-ஜிங்க்(Alu-Zinc)எனும் சிறப்பு பூச்சால் 50 முதல் 100 ஆண்டுகளானாலும் துருப்பிடிக்காது.
வீடு கட்டுமான முறை
வீட்டின் வரைபடம் (Floor Plan) முதலில் கணினியில் 3டி முறையில் வடிவமைக்கப்படுகிறது. வீட்டின் எந்த இடத்தில் ஜன்னல் வரும், மின்சார வயர்கள் மற்றும் குழாய்கள் செல்வதற்கான துளைகள் எங்கு வேண்டும் என்பது வரை துல்லியமாகத் தீர்மானிக்கப்படுகிறது. அதன்பின் கணினி கட்டளைப்படி இயந்திரங்கள் எஃகுச் சட்டங்களை துல்லியமான அளவுகளில் வெட்டி, துளைகளிட்டு ரெடிமேடாகத் தயாரித்து அனுப்பிவிடும்.
இதையடுத்து வழக்கமான அஸ்திவாரத்தின் மீது, இந்த எஃகுச் சட்டங்களைக் கொண்டு வந்து 'லெகோ' (Lego) பொம்மைகளைச் சேர்ப்பது போல நட்டு மற்றும் போல்ட் (Nut & Bolt) மூலம் இணைத்து வீட்டின் கட்டமைப்பை சில நாட்களிலேயே எழுப்பிவிடுவார்கள்.