

சொத்து வாங்கும் போது ஏற்படும் சிக்கல்களை சட்ட ரீதியாக, பாதுகாப்பாக, எளிதாக கடப்பது எப்படி என்பது குறித்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் டி.எஸ். பார்த்தசாரதியின் விளக்கங்கள் தொடர்ச்சி...
பொது அதிகார ஆவணங்கள் மூலம் வீடு, மனை, குடியிருப்புகளை வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்?
பவர் ஆப் அட்டர்னி எனப்படும் பொது அதிகார முகவர் மூலமாக வீடு, மனை, குடியிருப்புகளை வாங்கும்போது சிறு தவறு கூட நேரிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அறியாமல் செய்யும் சின்ன தவறு கூட முழு சொத்தையும் இழக்க வடிகால் அமைத்து விடும். பெரும்பாலான மோசடிகள் இதன்மூலம் தான் நடக்கிறது.
பொதுவாக பொது அதிகாரம் வைத்திருக்கும் நபர் அந்த சொத்தின் உரிமையாளர் அல்ல. உரிமையாளரால் நியமிக்கப்பட்டுள்ள சட்ட பிரதிநிதி. பவர் கொடுத்தவர் உயிருடன் இருக்கிறாரா என்பதை சரிபார்த்து அதன் பிறகே கிரையத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொது அ்திகாரம் கட்டாயம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
அசல் பொது அதிகார ஆவணத்தை வாங்கி சரிபார்க்க வேண்டும். ஜெராக்ஸ் நகல்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது. குறிப்பாக அந்த சொத்தை விற்பதற்கும், பதிவு செய்து கொடுப்பதற்கும் முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
ஒருவேளை பொது அதிகாரம் அளித்தவர் இறக்க நேரிட்டால் அந்த பொது அதிகாரமும் (பவர்) தானாகவே ரத்தாகி விடும். பவர் கொடுத்தவர் இறந்து விட்டதை மறைத்து ஒரு சொத்து விற்கப்பட்டால் அந்த விற்பனை சட்ட ரீதியாக செல்லாது.
எனவே சான்றளிக்கப்பட்ட அரசு மருத்துவர் மூலமாக பெறப்பட்ட பவர் கொடுத்தவர் உயிருடன் இருப்பதற்கான லைஃப் சான்றிதழ், ஆதார், வங்கி ஆவணங்களையும் விற்பனை ஆவணங்களுடன் இணைப்பது அவசியம்.
பொது அதிகார ஆவணம் ரத்தாகி இருந்தால் எப்படி அறிவது?
ஒருவேளை அந்த பொது அதிகாரம் ஏற்கெனவே ரத்தாகி இருந்தாலும் அதுவும் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என சரிபார்க்க வேண்டும். ஏனெனில் செல்லாத பவரை வைத்துக்கொண்டு மோசடியாக ஒரே சொத்தை பலருக்கு விற்பனை செய்வது அதிகம் நடக்கிறது.