

‘டிஜிட்டல்’ என்ற வார்த்தையை உச்சரிக்காத துறைகளே இல்லை. ஒரு கட்டிடத்தை கட்ட 10ஆண்டுகள், 10 ஆயிரம் ஆட்கள் தேவை என்ற கால
மும் மலையேறிவிட்டது. ‘ரெடிமிக்ஸ் கான்கிரீட்’ எப்படி கலவை மிஷினுக்கு மாற்றாக வந்துவிட்டதோ, கட்டுமானத் தொழிலாளர்கள் பங்கேற்பை குறைக்கும் வகையில் கட்டுமானத்துறையிலும் டிஜிட்டல் வந்துவிட்டது.
தமிழகத்தை பொறுத்தவரை, இன்றைய சூழலில் கட்டுமானத் தொழிலாளர்கள் தேவையை ஈடுகட்டும் அளவுக்கான ‘ஸ்கில்டு’ லேபர்’ கிடைப்பதில்லை. பொரும்பாலும் கட்டுமானப் பணிக்கு வெளிமாநிலத் தொழிலாளர்களை சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
ஆனால், தேவையான நேரங்களில் போதிய தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. மறுபுறம், திறமையான தொழிலாளர்கள் அதிக ஊதியமும், சிறந்த பணிச்சூழலும் எதிர்பார்க்கிறார்கள். அதேநேரம் கட்டுமானத் துறையால் அந்த எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை.
இந்தச் சவால்களைச் சமாளிக்க, கட்டுமான நிறுவனங்கள் மனித உழைப்பைக் குறைத்து, தானியக்கத் தொழில்நுட்பங்களை நோக்கி தீவிரமாக நகர வேண்டிய அவசியமாகி வருகிறது.
ஏற்கெனவே பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் எதிர்காலத்தின் தேவைக்கேற்ப பல்வேறு டிஜிட்டல் வடிவங்கள் கட்டுமானத்துறையில் அவ்வபோது ஊடுருவி வருகின்றன. 3 டி கட்டுமானம், முன் கட்டுருவாக்கம் போன்ற பல்வேறு தொழில்நுட்பங்கள் இன்று கட்டுமானத்துறையில் கோலோச்சி வருகின்றன.
பாரம்பரிய கட்டுமான முறையில் பணிகளை மேற்கொள்வோர் கூட, புதிய தொழில்நுட்பங்களை தேவைக்கேற்ப பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது. இந்த சூழலில்,எதிர்காலத்தில் தொழிலாளர்கள் பயன்பாட்டை குறைக்கும் ‘டிஜிட்டல் கட்டுமானங்கள்’ குறித்து விளக்குகிறார், சென்னை ஐஐடி சிவில் இன்ஜினியரிங் துறைத் தலைவர் பேராசிரியர் பென்னி ரபேல்.