

“மலிவாகக் கட்டுவது மட்டும் மலிவு வீடல்ல; முப்பது ஆண்டுகள் மலிவாக வாழ உதவும் வீடுதான் உண்மையான மலிவு வீடு.” வீடு கட்டும்போது சதுர அடிக்கு எவ்வளவு செலவாகும் என்று கணக்கிடுகிறோம்.
ஆனால் அந்த வீட்டில் குடியேறிய பிறகு முப்பது ஆண்டுகளுக்கு மின்சாரத்துக்காக எவ்வளவு செலவிடப் போகிறோம் என்று பெரும்பாலும் கணக்கிடுவதில்லை.
வெப்பம் மிகுந்த தமிழகத்தில் வீட்டைக் கட்டும் போதே வெயிலை எதிர்கொள்ளும் சில எளிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால், மின்விசிறியும் குளிர்சாதனப் பெட்டியும் ஓய்வெடுக்கலாம்; மின்கட்டணமும் குறையலாம்.
இதற்கான முதல் வழி ‘கூல் ரூஃப்’ (Cool Roof). வீட்டின் மொட்டை மாடியில் சூரிய வெப்பத்தை அதிகம் உறிஞ்சாத, பிரதிபலிக்கக்கூடிய பூச்சுகள் அல்லது ஓடுகளைப் பயன்படுத்துவது இதன் அடிப்படை.