

ஒரு வீட்டைக் கட்டுவது என்பது பலருடைய வாழ்நாள் கனவு. அந்தக் கனவை நனவாக்குவதற்காகப் பல ஆண்டுகள் உழைத்து, சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தைச் செலவழிக்கிறோம். ஆனால், அந்த வீட்டைக் கட்டுவதற்கு முன்பு ஒப்பந்ததாரர் (கான்ட்ராக்டர்) உடன் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தில் என்னென்ன விஷயங்கள் இடம்பெற வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
ஒரு கட்டிடத்துக்கான ஒப்பந்தம் என்பது வெறுமனே ஒரு சதுர அடிக்கு இவ்வளவு ரூபாய் என்று குறிப்பிட்டு கையெழுத்திடும் ஆவணம் அல்ல. கட்டி
டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், கட்டுமான முறைகள், ஒவ்வொரு பணிக்கான விவரம், கட்டிட வரைபடங்கள், அளவீட்டு முறை, பணம் செலுத்தும் கால அட்டவணை, பணியை முடித்துக் கொடுக்கும் காலம், உத்தர வாதம் என அனைத்தையும் தெளிவாக வரையறுக்கும் முக்கியமான ஆவணமாகும்.
உதாரணமாக, ஒரு ஒப்பந்ததாரர் ஒரு சதுர அடிக்கு ₹2,750 என்றும், மற்றொருவர் ₹2,500 என்றும் குறி்ப்பிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். இதில் குறைவான விலையைக் கொடுப்பவரைத் தேர்ந்தெடுப்பதுதான் சரியான முடிவா? நிச்சயமாக இல்லை.
இருவரும் பயன்படுத்தும் பொருட்களின் தரம், கட்டுமான முறைகள், வழங்கும் வசதிகள், ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்த பிறகே முடிவு செய்ய வேண்டும். எனவே, வீடு கட்டுவதற்கு முன்பு ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டிய முக்கியமான விஷயங்களைப் பார்ப்போம்.
கட்டிடத்தின் கட்டமைப்பு
கட்டிடம் எந்த வகையான கட்டமைப்பில் (Structural System) அமைக்கப்பட உள்ளது என்பதை முதலில் குறிப்பிட வேண்டும். ஆர்சிசி பிரேம்டு ஸ்டிரக்சர் முறையில் கட்டிடம் அமைக்கப்படுகிறதா, அதன் புட்டிங், காலம், பீம், ஸ்லாப் போன்றவற்றின் அளவுகள் என்ன, ஸ்டிரக்சுரல் டிராயிங்--ல் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் என்ன என்பவை தெளிவாக இருக்க வேண்டும்.
அடித்தளத்தின் ஆழம் என்பது ஒரு பொதுவான அளவைக் கொண்டு முடிவு செய்யக்கூடியது அல்ல. மண் பரிசோதனை அறிக்கை மற்றும் ஸ்டிரக்சுரல் இன்ஜினியர் வழங்கும் வரைபடம் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட வேண்டும்.