டயனோசர் முட்டைக்குள் வீடு!

டயனோசர் முட்டைக்குள் வீடு!
Updated on
2 min read

விண்ணை முட்டும் கட்டிடங்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன. கட்டிடங்களால் விளைநிலங்கள் காணாமல் போகின்றன. ஆனால் எல்லோருக்கும் வீடுகள் கிடைத்துவிடுவதில்லை. “ பத்து ஏக்கர்ல பங்களாவா கேட்குறோம்… பத்துக்கு பத்துல ரெண்டு சதுரம் இருந்தா போதும்” என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள் குறைந்த வருவாய் பிரிவு மக்கள். மிரட்டும் இடப்பற்றாக்குறை, கட்டுப்படுத்தமுடியாத விலை போன்ற காரணங்களால் சொந்த வீட்டுக்கனவை வென்றெடுக்க முடியாமல் தடுமாறுகிறார்கள் நடுத்தர வர்க்கத்தினர். இத்தனைக்கு நடுவிலும் குறைந்த இடத்தில் ரசனையாக வாழ நினைப்பவர்களுக்காகவே முட்டை வடிவிலான சின்னச் சின்ன வீடுகளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறார்கள் சுலோவாக்கியா நாட்டைச் சேர்ந்தவர்கள்.

முட்டைக்குள் அறைகள்

மத்திய ஐரோப்பாவில் இருக்கும் இந்த நாட்டைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் இணைந்து தொடங்கிய புதிய நிறுவனம் ‘நைஸ் ஆர்க்கிடெக்ட்ஸ்’. தங்கள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக இவர்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் வீடுதான் ‘எகோ கேப்சூல்’. கான்கிரீட் காடுகளுக்கு மத்தியில் வேண்டா வெறுப்பாக வாழ வேண்டிய நகரச் சூழலிருந்து விடுபட நினைப்பவர்களுக்காகவே இவர்கள் உருவாக்கியிருக்கும் இந்த வீடுகள் அசப்பில் அழகான டைனசார் முட்டைகளைப் போல் இருக்கின்றன.

இரண்டு பேர் தாராளமாகவும் ஆடம்பரமாகவும் வசிக்க ஏற்ற இந்த முட்டை வீட்டுக்குள் எக்கச்சக்க வசதிகள். இரண்டு பேர் படுத்துறங்கும் விதமாக ஒரு படுக்கையறை, சிறு சமையலறை, ஒரு சின்ன டைனிங் ஹால், ஒரு கழிவறை, ஒரு குளியலறை என வசீகரிக்கும் இந்த வீட்டில் உடைக்க முடியாத இரண்டு பெரிய கண்ணாடி ஜன்னல்கள்.

முட்டை வீட்டின் கூரை மீது சோலார் தகடுகள் அழகிய வடிவத்தில் பதிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல் முட்டை வீட்டை இன்னும் அழகாகக் காட்டும் ஒரு காற்றாலையும் நம்மைக் கவர்கிறது. இந்த இரண்டு சாதனங்களிலிருந்தும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் வீட்டுக்குள் சேமிக்கப்படுகிறது. திடீரென மழைபெய்தால் மழைநீரை அழகாகச் சேமித்து முட்டை வீட்டின் தரைதளத்துக்கு கீழே இருக்கும் தண்ணீர் தொட்டியில் சேமித்துவிடுகிறது.

எங்கும் வாழலாம்!

இரண்டுபேர் எந்த நெருக்கடியும் இல்லாமல் இந்த வீட்டுக்குள் வாழ முடியுமாம். மனிதர்களின் சராசரி உயரத்தைக் கணக்கில் கொண்டு கதவு, கூரையின் டிசைன் ஆகியவற்றை வடிவமைத்திருக்கிறார்கள். இந்த வீட்டில் நிரந்தரமாக வசிக்க முடியுமா என்ற கேள்விக்கு “தராளமாக” என்று வடிவமைத்தவர்கள் சொன்னாலும், சுற்றுலா செல்பவர்களுக்கு அட்டகாசமான அனுபவத்தைக் கொடுக்கும் என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள், இந்த வீட்டை வாங்கிக்கொண்டு ஐரோப்பா முழுவதும் சுற்றுலா போய் வந்திருக்கும் பல வாடிக்கையாளர்கள்.

இரண்டுபேர் எந்த நெருக்கடியும் இல்லாமல் இந்த வீட்டுக்குள் வாழ முடியுமாம். மனிதர்களின் சராசரி உயரத்தைக் கணக்கில் கொண்டு கதவு, கூரையின் டிசைன் ஆகியவற்றை வடிவமைத்திருக்கிறார்கள். இந்த வீட்டில் நிரந்தரமாக வசிக்க முடியுமா என்ற கேள்விக்கு “தராளமாக” என்று வடிவமைத்தவர்கள் சொன்னாலும், சுற்றுலா செல்பவர்களுக்கு அட்டகாசமான அனுபவத்தைக் கொடுக்கும் என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள், இந்த வீட்டை வாங்கிக்கொண்டு ஐரோப்பா முழுவதும் சுற்றுலா போய் வந்திருக்கும் பல வாடிக்கையாளர்கள்.

சுற்றுலாத் தலங்களில் இருக்கும் விடுதிகளில் இடம் கிடைக்காமல் அல்லாட வேண்டிய அவசியமில்லை. பனிமலை, மலை உச்சி, கடற்கரை, புல்வெளி, பூங்கா, சாலையோரம் என இயற்கை ஆட்சிசெய்கிற எல்லா இடங்களிலும் ‘எகோ கேப்சூல்’ வீட்டை நிறுத்திக்கொள்ளலாம். உங்கள் காருடன் இழுத்துச்செல்ல வசதியாக நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்ட வீடு இது. வசதியிருப்பவர்கள் இந்த வீட்டின் கூறையில் இருக்கும் கொக்கியைப் பயன்படுத்தி ஹெலிகாப்டர் மூலம் தூக்கிச் சென்று எங்கு வேண்டுமோ அங்கே வைத்துக்கொண்டு வாழ ஆரம்பிக்கலாம். இடம் ஒரு பிரச்சினை இல்லை என்றால் உங்கள் வீட்டுத் தோட்டத்திலும் முட்டை வீட்டுக்கு இடம் தரலாம்.

இதுவரை 50 வீடுகளை விற்று சாதனை படைத்திருக்கிறார்கள் இந்த இளைஞர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in