

வீட்டுச் சுவரை அலங்கரிப்பதற்கு ஒளிப்படங்களைத் தேர்ந்தெடுப்பது எளிமையானது. ஒளிப்படங்களால் ஓர் அறையின் தோற்றத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். ஆனால், எந்த மாதிரியான ஒளிப்படங்களால் அறையை அலங்கரிக்கப் போகிறீர்கள் என்பது முக்கியம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழைய கருப்பு-வெள்ளை ஒளிப்படங்கள், உங்கள் குழந்தைகளின் ஒளிப்படங்கள், இயற்கைக் காட்சிகள் என உங்களுக்குப் பிடித்த கருப்பொருளில் ஒளிப்படங்களைத் தேர்ந்தெடுக்கலாம். இவற்றை எப்படி அறையில் மாட்டுகிறீர்கள் என்பதில்தான் அலங்காரயுத்தி அடங்கியிருக்கிறது.
ஒரு பெரிய ஒளிப்படம்
ஒரே ஒரு பெரிய ஒளிப்படத்தை வைத்துக்கூட அறையின் தோற்றத்தை மாற்ற முடியும். உதாரணத்துக்கு, வெள்ளை நிறச் சுவரில், ஓர் அழகான பெரிய இயற்கைக் காட்சி ஒளிப்படத்தை மாற்றலாம். அது அறைக்குத் தேவைப்படும் வண்ணங்களைக் கொடுக்கும்.
முத்தான மூன்று
ஒரே கருப்பொருளில் மூன்று ஒளிப்படங்களைத் தேர்ந்தெடுத்து ஒரு ‘டிரைடிக்’கை (triptych) உருவாக்கலாம். ஒரே மாதிரி ஃப்ரேமில், அளவில் இந்த மூன்று ஒளிப்படங்களும் இருக்க வேண்டும். ஒருவேளை, உங்களுக்கு கட்டிடக் கலையில் ஆர்வம் இருந்தால், உங்களுக்குப் பிடித்த மூன்று கட்டிடங்களின் ஒளிப்படங்களை அறையில் மாட்டி வைக்கலாம். உங்கள் ஒளிப்படத்தைக்கூட இந்த ‘டிரைடிக்’கை உருவாக்கப் பயன்படுத்தலாம்.
சிறியதே அழகு
அறையில் இடப்பற்றாக்குறை பிரச்சினை இருப்பவர்கள் சிறிய ஒளிப்படங்களால் அறையை அலங்கரிக்கலாம். உங்கள் அறையின் சுவர் அடர் நிறத்தில் இருந்தால், ஒளிப்படங்களின் ஃப்ரேம்களையும், மேட்களையும் கறுப்பு வெள்ளையில் தேர்ந்தெடுக்கலாம். ஒளிப்படங்கள் வேறுவேறு கருப்பொருளில் இருந்தாலும், இவற்றை வித்தியாசமாக அடுக்கிவைக்க முடியும். ஓர் ஒளிப்படத்தைச் செங்குத்தாகவும், மற்றொன்றைக் கிடைமட்டமாகவும் தொங்கவிடலாம். இந்த மாறுபட்ட வரிசை அறைக்கு வித்தியாசமான அழகைக் கொடுக்கும்.
கண்காட்சி சுவர்
அறையின் நீளத்தைப் பொருத்து, சுவரில் ஒளிப்படங்களைக் கண்காட்சி போல அடுக்கி வைக்கலாம். விருப்பப்பட்டால், இந்த ஒளிப்படங்களுக்கு மேல் சிறிய விளக்குகளையும் அமைக்கலாம். ஒருவேளை, உங்கள் அறை நீளமாக இல்லாமல், கூரை உயரமாக இருந்தால் ஒளிப்படங்களைச் செங்குத்தாக மாட்டலாம். இந்த ஒளிப்படங்கள் அறையின் நீளத்தையும், உயரத்தையும் அழகாக எடுத்துக்காட்டும்.
ரயில் அமைக்கலாம்
ஒளிப்படங்களை வைத்து அறையில் ஒரு ‘போட்டோ ரயில்’ அமைக்கலாம். இரண்டு புறமும் சட்டகங்களை வைத்து அதில் ஒளிப்படங்களை வரிசையாக அடுக்கலாம்.
விதிகளை உடைக்கலாம்
ஒளிப்படங்களை ‘ஹெட்போர்ட்’(Headboard) அளவில்தான் மாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. அறையில் எந்த உயரத்தில் வேண்டுமானாலும் மாற்றலாம். ஆனால், அந்த இடம் அறையின் ‘ஃபோகல் பாயிண்ட்’டாக இருக்க வேண்டியது முக்கியம்.
கண்ணாடித் தடுப்புகள்
ஒளிப்படங்களைச் சுவரில்தான் மாட்ட வேண்டும் என்ற அவசியமில்லை. உங்கள் வீட்டில் ஜன்னலுக்குப் பதிலாகக் கண்ணாடித் தடுப்புகள் இருந்தால் அதிலும் ஒளிப்படங்களைப் பொருத்தலாம்.
படிக்கும் மேசை
உங்கள் படிக்கும் மேசையை ஜன்னலுக்கு அருகில் அமைக்க முடியவில்லையென்றால், அந்த மேசைக்கு மேல் ஒரு ஒளிப்படத்தை மாட்டி வைக்கலாம். இந்த ஒளிப்படத்தின் அளவும், மேசையின் அளவும் ஒன்றாக இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான், அது அறைக்குச் சமநிலை உருவாகும்.