

தவணை முறையில் மனை வாங்குவது இன்று அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே அதிக வரவேற்பையும் பெற்றுள்ளது என்றே கூறலாம். மொத்தமாக ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் பணம் கொடுத்து மனை வாங்க முடியாதவர்களுக்கு சுலபத் தவணைத் திட்டம் ஒரு வரப்பிரசாதமாமே.
தவணை முறையில் மனை வாங்குவது என்பது டி.வி., மிக்ஸி வாங்குவது போல அல்ல. எனவெ தவணை முறையில் மனை வாங்குபவர்கள் சில விஷயங்களை மனதில் போட்டு வைத்துக்கொள்வது நல்லது.
சுலப தவணைத் திட்டத்தில் விற்கப்படும் மனைகள் பெரும்பாலும் ஊருக்கு வெளியேவோ அல்லது தொலைதூரத்திலோ அமைக்கப்படுகின்றன.
இப்படி விற்கப்படும் மனைகளைத் தேர்வு செய்வதற்கு முன்பு பல அம்சங்களை ஆராய வேண்டும். குறிப்பாக மனை உள்ள இடத்துக்கு சென்று வர போக்குவரத்து வசதி உள்ளதா என்று கவனிக்கவும்.
மனைகளை வாங்குவதற்கு முன், மனைக்கான லே-அவுட் உள்ளாட்சி அமைப்பிடம் சமர்பிக்கப்பட்டு அங்கீகாரம் வாங்கப்பட்டிருக்கிறதா என்பதையும் கவனிக்கவும்.
அங்கீகாரம் பெற்ற மனை என்று தெரிந்தால் மட்டுமே வாங்க வேண்டும். அப்போதும் வில்லங்கச் சான்றிதழைக் கேட்கத் தவற வேண்டாம்.
மூலப் பத்திரம் எனப்படும் ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்
புரமோட்டர் யார் என்பதை முக்கியமாகத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அவர் எப்படிப்பட்டவர்? எத்தனை ஆண்டுகளாக இந்த தொழிலில் இருக்கிறார்? அவரது பின்னணி என்ன என்பதையெல்லாம் விசாரித்து அறிவது அவசியம்.
லே-அவுட் போடப்பட்டிருக்கும் மனை புரமோட்டருக்குச் சொந்தமானதா? அல்லது வேறொருவர் நிலத்துக்கு இவர் பவர் ஆஃப் அட்டர்னி பெற்று விற்பனை செய்கிறாரா என்பதையும் கவனிக்க வேண்டும்.
புரமோட்டரின் சொந்த நிலமாக இருந்தால் சிக்கல்கள் இருக்காது. பவர் ஆஃப் அட்டர்னியாக இருந்து நிலத்தின் உரிமையாளர் பவரை ரத்து செய்திருந்தால் மனை வாங்கியவர்களுக்குப் பிரச்சினைதான்.
தவணையில் மனை வாங்குவோரில் பலர், புரமோட்டருடன் கிரய ஒப்பந்தம் போட்டுக்கொள்வதில்லை. தெளிவாக ஒப்பந்தம் போட்டுக்கொண்டால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
எப்போது நாம் தவணைப் பணத்தைச் செலுத்தத் தொடங்குகிறோமோ, அப்போதே அந்த நிலத்தில் உரிமை பெற்றுவிடுகிறோம். அதனால் தவணைக் காலத்தில் நிலத்தை அடிக்கடி பார்வையிட வேண்டும்.
தவணை முறையில் மனை வாங்குவதில் இப்படி இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன.