

உலகளாவிய மந்த நிலை, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு, வீடுகள் விற்பனைக் குறைவு என ரியல் எஸ்டேட் துறை தள்ளாடிக்கொண்டிருக்கிறது. அதன் எதிரொலியாக 2014-ம் ஆண்டில் ஜூலை - டிசம்பர் இடையிலான காலகட்டத்தில் சென்னையில் வீடு கட்டும் புதிய திட்டங்கள் 25 சதவீதம் குறைந்துவிட்டதாகத் தெரிய வந்திருக்கிறது.
இந்தியா ரியல் எஸ்டேட் அவுட்லுக் என்ற பெயரில் நைட் ஃபிராங்க் இந்தியா நடத்திய ஆய்வில்தான் இது தெரிய வந்துள்ளது. சென்னை குடியிருப்பு சந்தை மந்தமாக இருப்பதும், மவுலிவாக்கம் கட்டிட விபத்து ஆகியவையும் இதற்குக் காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன.
அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும்போது அதன் தரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் செயல்முறைகளை விளக்கும் கையேட்டைக் கட்டுமான நிறுவனங்களின் சங்கமான கிரெடாய் வெளியிட்டுள்ளது.வலுவான குடியிருப்பு கட்டிடம் கட்ட நிலையான நடைமுறைகளைக் கொண்ட கையேடு இது.
கட்டுமானத்துறைப் போராசிரியர்கள், கட்டுநர்கள், துறை நிபுணர்கள் எனப் பலரும் சேர்ந்து இதை உருவாக்கியுள்ளார்கள். இந்த கையேட்டை கிரெடாய் வலைத் தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மவுலிவாக்கம் கட்டிட விபத்தின் ஒரு பகுதியாக இந்தக் கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆறு மாதங்களில் வீடுகளின் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு வீடு வாங்குபவர்கள் மத்தியில் நிலவுவதாக ஆய்வு முடிவு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எம்., மேஜிக்பிரிக்ஸ் ஆகியவை இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன.
இந்த சர்வே அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, குர்கான், ஐதராபாத், கொல்கத்தா, மும்பை, நொய்டா, புனே ஆகிய நகரங்களில் நடத்தப்பட்டிருக்கிறது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வீடு விலை குறையும் என்று கூறியிருக்கிறார்கள்.