கண்ணாடி செய்யும் மாயம்

கண்ணாடி செய்யும் மாயம்
Updated on
2 min read

வீட்டின் வரவேற்பறையில் கண்ணாடி வைத்தால் அதிர்ஷ்டம் வந்து சேரும் என்ற நம்பிக்கையோடு இருப்பவர்கள் உண்டு. கண்ணாடி முன் கண் விழித்தால் நல்லது எனும் நம்பிக்கையோடு தூங்கி எழுந்தவுடன் காலையில் கண்ணாடி பார்ப்பவர்கள் உண்டு. இவை அல்லாது நம்மை நாமே பார்த்து ரசித்து, அலங்கரித்துக் கொள்வதற்கு அனைவரும் கண்ணாடியைப் பயன்படுத்துகிறோம்.

ஆனால் நம் வீட்டை அலங்கரிக்கும் பொருள்களில் ஒன்றாகக் கண்ணாடி பயன்படும் என இதுவரை யோசித்ததுண்டா? நவீன வீட்டு அலங்கார வடிவங்களில் கண்ணாடி முக்கிய இடம்பிடிக்கிறது. அலங்கரிக்கப்பட்ட சுவர்க் கண்ணாடிகள் மற்றும் அழகிய கண்ணாடிச் சட்டகங்கள் கொண்டு உங்கள் வீட்டுக்குப் புதுப்புது அர்த்தங்கள் தரலாம்.

சிறிய அறையில் பெரிய கண்ணாடி

அறையின் சுற்றளவுக்கு ஏற்ற மாதிரிதானே இதுவரை கண்ணாடி பொருத்தியிருப்பீர்கள், இனித் தலைகீழாக யோசியுங்கள் என்கின்றனர் நவீன வடிவமைப்பாளர்கள். சிறிய அறையில் பெரிய கண்ணாடியைப் பொருத்தும்போது அந்த அறையே பரந்து விரிந்து பிரம்மாண்டமாக இருப்பது போன்ற மாயை ஏற்படும்.

வரவேற்பறைச் சுவரில் ஓவியம் மாட்டி வைத்திருந்தால் அதற்கு எதிர்ப்புறத்தில் பெரிய கண்ணாடி பதிக்கும்போது அந்த அறை முழுவதும் சித்திரத்தின் அழகு பிரதிபலிக்கும். விதவிதமான வடிவங்களில் உள்ள கண்ணாடிகளைச் சுவரில் மாட்டும்போது உங்கள் பழைய வீட்டுக்கு நவீனத் தோற்றம் தர முடியும்.

வீட்டு உபயோகப் பொருள்களில் கண்ணாடி

கண்ணாடி பதிக்கப்பட்ட உணவு மேஜை, இழுப்பறை கொண்ட அலமாரிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு விதத்தில் உங்கள் வீட்டின் அழகை இவை தூக்கி நிறுத்தும். உதாரணத்துக்கு, உங்கள் வரவேற்பறையில் ஒரு பகுதியை உணவு அறையாக நீங்கள் மாற்றியிருக்கலாம்.

ஆனால் வீட்டின் உள்ளே நுழைந்தவுடன் அறையின் மையத்தில் ஒரு பெரிய உணவு மேஜை இருப்பது அறையில் அழகைக் குலைப்பது போலத் தோன்றலாம். இதற்கு மிக எளிமையான தீர்வு உங்கள் உணவு மேஜையின் மேற்பரப்பின் சுற்றளவுக்கு ஏற்ற கண்ணாடியைப் பொருத்துவதுதான். அதன்பின் மேஜையானது கண்கட்டு வித்தைப் போல மறைந்துவிடும். சிறிய அறையில் கண்ணாடி பதிக்கப்பட்ட இழுப்பறை அலமாரிகளை வைத்தால் அது தரையைப் பிரதிபலிக்கும். இப்படியாக அந்த அறையின் பரப்பளவு பெரிதாகக் காட்சியளிக்கும்.

எதைப் பிரதிபலிக்கிறது?

சில வீடுகளில் வாஷ் பேசின், பீரோ, குளியலறை, சமையலறை, படுக்கை அறை, வரவேற்பறை இப்படி எங்குப் பார்த்தாலும் கண்ணாடிகள் மாட்டப்பட்டிருக்கும். இவ்வாறு பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகள் நம்மை மட்டுமல்ல எதிரே இருக்கும் அத்தனை விஷயங்களையும் பிரதிபலிக்கும் என்பதைக் கவனிக்க வேண்டும்.

படுக்கை அறையில் துணிமணிகள் சிதறிக் கிடக்கலாம், வரவேற்பறையில் ஒரு ஓரத்தில் பழைய கிழிந்துபோன சோபா செட் இருக்கலாம், அலமாரிகளில் காகிதக் குவியல் இருக்கலாம் இப்படி நீங்கள் வெளிக்காட்ட விரும்பாத எத்தனையோ விஷயங்களை ஆங்காங்கே உள்ள கண்ணாடி பிரதிபலித்துக் கொண்டிருக்கும். எப்படியோ கண்ணாடிகள் வீட்டின் அழகை மேம்படுத்தக்கூடியவை.

ஒரு விதத்தில் அதன் பிரதிபலிக்கும் தன்மை வீட்டை ஒளிமையமானதாக மாற்றும். கண்ணாடிகள் இல்லாத உலகம் இன்றைக்குச் சாத்தியமே இல்லை. அந்தளவுக்குக் கண்ணாடிகள் எங்கும் நிறைந்திருக்கின்றன. அதைக்கொண்டு வீட்டை அலங்கரிப்போம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in