

இந்தியாவில் சுமார் 60 கோடி மக்களுக்குக் கழிப்பறை வசதி இல்லை. சுமார் 53 சதவீத வீடுகளில் கழிப்பறை இல்லை. குறிப்பாக வளர்ச்சி அடையாத புற நகர்ப் பகுதிகளில் வாழ்பவர்கள் திறந்த வெளியைத்தான் கழிப்பறையாகப் பயன்படுத்திவருகிறார்கள். இதனால் பலவிதமான தொற்று நோய்களுக்கு ஆளாகிறார்கள். இதுபோன்ற கவலை தரும் செய்திகளைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டேதான் இருக்கிறோம்.
உறைவிடம், உணவு, கல்வியைப் போல நல்ல கழிவறையும் மக்களின் அடிப்படைத் தேவை; உரிமை. இந்த நிலைக்கு என்ன தீர்வு? யார் அதை முன்னெடுப்பது? அதற்கான முதல் விதையைத் தூவியிருக்கிறார் திரைப்பட இயக்குநர் சுரேஷ் மேனன். 7 லட்சம் செலவில் 20 அடி நீளமுள்ள சரக்கு லாரியின் பெட்டிகளைக் குளியலறைகளாக, கழிப்பறைகளாக மாற்றிப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தந்திருக்கிறார்.
லாரி மாறிய கதை
பயன்படாத ஒரு சரக்கு லாரிப் பெட்டியைச் சென்னையில் கண்டவுடன் அதைக் கழிப்பறையாக மாற்றலாம் என முதலில் சுரேஷ் மேனனுக்குத் தோன்றியிருக்கிறது. ஒரு தொழிற்சாலையில் அதன் வடிவத்தைக் கழிப்பறைக்கு ஏற்றாற்போல மாற்றித் தரும்படி கூறியிருக்கிறார். பிறகு சென்னையிலிருந்து கும்பகோணம் அருகே உள்ள மஞ்சகுடி என்ற கிராமத்திற்கு லாரியிலேயே அந்த நூதன சரக்கு லாரி கழிப்பறை கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது.
அடுத்து, தண்ணீர்க் குழாய்கள், மின்சார வயர்கள் பொருத்தப்பட்டு, கழிவு நீர்த் தொட்டிகள் இணைக்கப்பட்டுக் கழிப்பறை தயாரானது. தற்போது பெரும்பாலும் மஞ்சகுடியில் குடியிருக்கும் பெண்கள் இந்தக் கழிப்பறைகளைத்தான் பயன்படுத்திவருகிறார்கள்.
சிறப்பம்சம்
கான்கிரீட்டால் கட்டப்படும் கழிப்பறைகள்போல் அல்லாது இவ்வகை கழிப்பறைகளை இடம்பெயர்த்துக் கொண்டுசெல்ல முடியும் என்பது இதன் தனிச் சிறப்பு. வேறிடத்துக்குக் கொண்டுசென்று பழுது பார்ப்பது சுலபம் என்பதால் தற்சமயம் பயன்பாட்டிலிருக்கும் பொதுக் கழிப்பிடங்களைக் காட்டிலும் இந்தச் சரக்குப் பெட்டிக் கழிப்பறைகள் மேலும் பயனளிக்கும் என்று நம்பப்படுகிறது.
அடுத்த கட்டமாகச் சூரிய சக்தி மின்சாரம் கொண்ட விளக்குகள் மற்றும் வழக்கமான கழிவு நீர்த் தொட்டிகளுக்குப் பதிலாக பயோ தொட்டிகள் என்று அழைக்கப்படும் மறுசுழற்சி முறையில் இயங்கும் கழிவுத் தொட்டிகளை உருவாக்கும் திட்டத்தையும் முன்வைத்திருக்கிறார் சுரேஷ் மேனன்.
உலகின் வசதியான வீடு உள்ள நம் நாட்டில் குளிப்பது, சிறு நீர் கழிப்பது போன்ற அடிப்படை விஷயத்திற்கே மக்கள் அல்லல்பட்டுக்கொண்டிருப்பது ஆரோக்கியமான விஷயமல்ல. மாற்றத்திற்கான முதல் விதையை சுரேஷ் மேனன் தூவியுள்ளார்.