வெயில் வருது... வெயில் வருது...

வெயில் வருது... வெயில் வருது...
Updated on
2 min read

அய்யோ குளிருதே என்று அரற்றிய கடும்பனிக் காலம் கடந்துசென்றுவிட்டது. ‘அப்பா வெயில் தாங்கல’ என்று முனகியபடியே பலர் வெயிலில் அலையும் கோடைக் காலம் வந்துவிட்டது. போன வருடத்தைவிட இந்த வருடம் வெயில் அதிகம் என்று ஆண்டுதோறும் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். வழக்கம்போல் இந்த ஆண்டும் இந்தச் சொற்றொடரை இப்போதே அவ்வப்போது கேட்க முடிகிறது. இவை எல்லாவற்றுக்கும் காரணமான கோடையின் வெயில் முகத்தில் அறையத் தொடங்கிவிட்டது. இந்த வெயில் காலத்து வெம்மையிலிருந்து நம்மை நாம் காத்துக்கொள்ள வேண்டும்.

அதே போல் நமது வசிப்பிடமான வீட்டையும் வெயிலிலிருந்து காத்துக்கொள்ள வேண்டும். அதுக்குள்ள என்ன அவசரம் வந்த பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று மெத்தனமாக இருப்பதைவிட வரும் முன் காத்துக்கொண்டால் சில சிக்கல்களைத் தவிர்த்துவிடலாம்.

பொதுவாக வீட்டுக்குள் வெயில் வருவதை முடிந்த அளவு தவிர்த்தாலே வெம்மை வீட்டுக்குள் பரவுவதை ஓரளவு தடுத்துவிட முடியும். அதற்கு என்ன செய்யலாம் என்று பார்த்துப் பார்த்து அதற்கான நடவடிக்கைகளில் இறங்கிச் செய்து முடித்தாலே கோடையை ஒரு வழியாகச் சமாளித்துவிடலாம். வீட்டின் கூரையில் தான் வெயில் நேரடியாகத் தாக்கும். வெப்பமான சூரியக் கதிர்கள் வீட்டின் கூரைகளில் விழுந்து தம் வெம்மையால் வீட்டை மூழ்கத் துடிக்கும். ஆகவே, வீட்டின் கூரைகளில் வெயில் நேரடியாகத் தாக்குவதைத் தவிர்க்கும் வகையிலான வசதிகளை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. இப்போதெல்லாம் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக வீட்டின் மொட்டை மாடியில் வெள்ளை நிறத்தைப் பூசுவதை வழக்கமாக்கிக்கொள்கிறார்கள். இதைப் போன்ற செயல்பாடுகளால் வெயில் காரணமான வெம்மை வீட்டுக்குள் கடத்தப்படுவதைக் குறைக்கலாம்.

அதேபோல் வீட்டின் ஜன்னல்களில் தொங்கவிடப்படும் திரைகளின் வண்ணங்கள் மெல்லியவையாக இருப்பது கோடைக் காலத்துக்கு உகந்தது. மெல்லிய வண்ணங்களாலான திரைச்சீலைகளில் வெப்பம் தங்கியிருக்கும் வாய்ப்பு குறைவு. எனவே, வெளியில் நிலவும் வெம்மை கலந்த காற்று வீட்டுக்குள் வரும்போது அது திரைச்சீலைகளில் சிறிதளவு வெம்மையைப் படரவிடும். அடர் நிற திரைச்சீலைகளைத் தொங்கவிட்டால் அந்த வெம்மையானது திரைச்சீலையில் தங்கிவிடக்கூடும். ஆகவே, கோடைக் காலத்துக்கு ஏற்ற பருத்தித் துணிகளாலான, மெல்லிய வண்ணம் கொண்ட திரைச்சீலைகளை மட்டுமே வீடுகளில் தொங்கவிட வேண்டும்.

கோடைக் காலத்தில் வீட்டுக்குள் அநாவசியமாக வெப்பம் உருவாகும் நிலையைத் தவிர்த்துவிட வேண்டும். வெம்மையைத் தரும் மின்சாதனங்களை அவசியப்பட்ட நேரத்தில் மட்டுமே இயக்க வேண்டும். பிற நேரங்களில் அவற்றை நிறுத்திவைக்க வேண்டும். உதாரணமாக, வாசிப்பதற்கு அதிக வெளிச்சம் தேவை என்பதால் அதிக ஆற்றலில் செயல்படும் பல்புகளைப் பயன்படுத்துவோம். அத்தகைய பல்புகளைப் பகலில் பயன்படுத்துவதை முடிந்தவரை குறைத்துவிட வேண்டும்.

சென்னை போன்ற நகரங்களில் பல வீடுகளில் பகலிலும் விளக்குப் போட்டால் தான் வீட்டில் வேலைகளைப் பார்க்க முடியும் என்பதுதான் நிலைமை. ஆனாலும், அதைக் காரணமாக வைத்து எல்லா அறைகளிலும் விளக்கைப் போட்டுவைக்கக் கூடாது. நாம் புழங்காத அறைகளில் விளக்கெரியவிடுவதைத் தவிர்க்க வேண்டும். சிறு சிறு நடவடிக்கைகளில் நாம் காட்டும் கவனமே பெரிய விஷயங்களிலிருந்து நம்மைக் காத்து நிற்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அதேபோல் வெயில் காலத்தைச் சமாளிப்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டைச் சுற்றி வேப்ப மரம் போன்ற இதமான சூழலை எப்போது நமக்களிக்கும் மரங்களை நட்டுவைத்திருந்தால் அது கோடைக் கால வெப்பத்திலிருந்து நம்மைக் காத்து நிற்கும். எவ்வளவு இயலுமோ அவ்வளவு செடி, கொடிகளையும் மரங்களையும் வீட்டைச் சுற்றி அமைக்கும்போது, கடுமையான கோடைக் காலத்தை நாம் பெரிய கஷ்டங்கள் இன்றி கடந்துவிட முடியும். ஒவ்வொரு வீட்டையும் அமைக்கும் முன்னர் செடி, கொடி, மரங்களுக்கென இடம் விட்டே கட்ட வேண்டும்.

இயற்கையான சூழல் அமையாத வீட்டை எவ்வளவு செலவு செய்து கட்டினாலும் அதன் பயன் மிகக் குறைவே. வீட்டுக்குள் முடிந்த அளவு இயல்பான குளுமைச் சூழல் நிலவக்கூடிய சுற்றுப்புறத்தை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து கோடைக்கு உகந்தது குளிர்சாதன வசதிதான் என ஏசி அறைகளில் தஞ்சமடைவது மீண்டும் வெயிலை அதிகரிக்கவே உதவும் என்பதை மறந்துவிடக் கூடாது. ஓசோன் படலம் நாளுக்கு நாள் பலவீனமாகிக்கொண்டே வருகிறது எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

மொட்டைமாடியில் தோட்டம் போடுவதன் அவசியத்தை வெயில் காலத்தில் உணரலாம். வீட்டின் கூரைப் பகுதியிலும், சுவர்களிலும் பரவும் வெயில் காரணமாகத்தான் வீட்டில் வெம்மை பரவுகிறது. அதுவும் இப்போதெல்லாம் கான்கிரீட் கட்டிடங்களைத் தானே கட்டி எழுப்புகிறோம். அவற்றில் தங்கும் வெம்மையானது கிட்டத்தட்ட அதிகாலை வரை சிறிது சிறிது வெப்பத்தை உமிழும். எனவேதான் வீடானது அனலாகக் கொதிக்கும். ஆக, இந்த வெம்மையைச் சமாளிப்பதில் முன்னெச்செரிக்கை உணர்வுடன் நடந்துகொண்டால் மட்டுமே வெயில் காலத்தை நம்மால் தாங்க முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in