

குழந்தைகளுக்கு என்று வீடுகளில் தனி அறை ஏற்படுத்திக் கொடுப்பது இப்போது இந்தியக் கலாச்சாரத்தில் கலந்துவிட்டது. குழந்தைப் பருவத்திலேயே அவர்களின் ஆளுமைப் பண்பு உருவாவதற்கு இது சாதகமான சூழலை ஏற்படுத்தித் தரும்.
குழந்தைகளுக்காகப் பிரத்யேக அறைகள் அமைக்கும்போது அவர்களுக்கு விருப்பமான அறைகளாக அது இருக்க வேண்டும் இல்லையா? அதனால் பெற்றோர் குழந்தைகள் அறைகளை அமைக்க அதிகமாகவே மெனக்கடுகிறார்கள்.
அவர்களின் மனதிற்குப் பிடித்த வகையில் அமைக்க வேண்டும். குழந்தைகளோ எளிதில் சமரசம் அடையக்கூடியவர்கள் அல்ல. மேலும் அறையின் அமைப்பு குழந்தைகளின் மனநிலையைச் சந்தோஷமாக வைத்துக்கொள்வதாகவும் இருக்க வேண்டும். பெரியவர்களின் விருப்பங்கள், தேர்வுகள் வேறு. ஆனால் குழந்தைகள் வண்ணமயமான உலகத்தில் வாழ்பவர்கள். அவர்களின்
அறைகளை வண்ணமாக்குவது வெறும் செயல் மட்டுமல்ல. ஒருவிதத்தில் அது ஒரு மனப் பயிற்சி. எடுத்தோம் கவிழ்த்தோம் எனச் செய்துவிட முடியாது.
குழந்தைகளின் மனத்தை அறிய வேண்டும். அதன் பின்பே இது சாத்தியம். இந்தப் பரபரப்பான வாழ்கையில் இதற்கெனத் தனியாக நேரம் ஒதுக்கிச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குழந்தைகளின் மனம் போல் அவர்களுடைய அறைகளை வண்ணமயமாக்கித் தர பல நிறுவனங்கள் வந்துவிட்டன.
குழந்தைகளுக்கான வண்ணப்பூச்சுகள்
குழந்தைகளின் அறைகளில் அவர்களுக்குப் பிடித்த டோரா புஜ்ஜியை, டெடி பியரை அழகாக வரைந்து கொடுப்பார்கள். இதுமட்டுமல்ல உங்கள் செல்லக் குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி அவர்கள் விரும் பும் வண்ணங்களில் கார்ட்டூன் வரைந்தும் தருகிறார்கள்.
இதற்காகப் பயன்படுத்தப் படும் வண்ணப்பூச்சுகளில் லெட் (lead), மெர்குரி (mercury) போன்ற நச்சுப் பொருட்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்கிறார்கள். குழந்தைகளுக்குத் தீங்கு இழைக்காதவாறு எமல்ஷன் வண்ணம் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் மதுரை அபிராமி எண்டர்பிரசைஸ் - கலர் கஃபே என்ற நிறுவனத்தைச் சேர்ந்த சண்முகநாதன். இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தப் பணியில் ஈடுபட்டுவருகிறார்.
அவர் இது குறித்துச் சொல்லும்போது, “இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது. மேலும் நாங்கள் வண்ணமடிக்க பிரத்யேகமான எமல்ஷன் வண்ணத்தைப் பயன்படுத்துகிறோம். இது சிங்கப்பூரின் கிரீன் லேபிள் தரச் சான்று பெற்றது. தீங்கு இல்லாதவை. இதனால் பெற்றோர் பலரும் எங்களை நாடி வருகிறார்கள்” என்கிறார் அவர்.
கண்களுக்கு விருந்து
நாம் கட்டும் வீட்டின் அமைப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் எனத் திட்டமிடுவது ஒரு கலை என்றால், அந்தத் திட்டத்திற்கு முழுமை சேர்த்து வீட்டைக் கண்களுக்கு விருந்தாக்குவதே வண்ணங்கள்.
வண்ணம் ஒரு சிறிய அறையைச் சற்று விஸ்தாரமாகவும் காட்டக்கூடும், அதேவேளையில் ஒரு பிரம்மாண்டமான அறையைக் கண்ணுக்கு அடக்கமாகவும் காட்ட முடியும். அந்த வண்ணங்களைத் தேர்வுசெய்யும்போது நமக்குக் கவனம் இருக்க வேண்டும். குழந்தைகள் அறைகள் மட்டுமல்லாது, ஒவ்வோர் அறைக்கும் வெவ்வேறுவிதமான பொருத்தமான வண்ணங்களைத் தேர்வுசெய்ய வேண்டும். முழு வீட்டிற்கு வண்ண மடித்துத் தருவதற்கும் இன்று நிறுவனங்கள் இருக்கின்றன.
பொதுவாக, வீடு கட்டுபவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு, “பெயிண்ட் அடிக்க காண்ட்ராக்ட் விட்டோம், ஆனால் இழுத்துக்கொண்டே போகிறார்கள்” என்பதுதான். ஆனால், இன்று சுமார் 3,500 சதுர அடி உள்ள கட்டிடத்திற்கு ஒரே நாளில் பெயிண்டிங் செய்து தருவதற்கான தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன என்கிறார் சண்முகநாதன்.
ஆள் பாதி ஆடை பாதி என்பது போல என்னதான் பார்த்துப் பார்த்து வீடு கட்டுனாலும் வண்ணம்தான் வீட்டிற்கு முழு அழகைத் தரும். அழகு மட்டுமல்ல. சுவரின் வண்ணம் நம் மனநிலையைச் சந்தோஷமாகவும் வைத்துக்கொள்ள உதவும். வண்ணங்களைக் கவனத்துடன் கையாண்டால் ஆனந்தம் விளையாடும் வீடாகும்.