

வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், சோஃபா, கட்டில், மர சாமான்கள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வைப்பதற்குத் தேவையான இடத்தைக் காட்டிலும் வீட்டின் பரப்பளவு மிகச் சிறியதாக இருக்கிறதா? இதில் சவுகரியமாக நடமாடுவதே கஷ்டமாக இருக்கும்போது எங்கே அழகாகப் பராமரிப்பது என மலைப்பும், எரிச்சலும் வருகிறதா? உங்கள் வீட்டின் அறைகள் சிறியதாக இருந்தாலும் அழகாகப் பராமரித்து மகிழ்ச்சியாகப் புழங்கச் சில குறிப்புகள்.
இடத்தை முழுமையாகப் பயன்படுத்தலாம்
சிறிய அறையாக இருந்தால் பொருள்களை அடுக்கப் போதுமான இடமில்லை என நினைத்துக் கொள்கிறோம். ஆனால், இருக்கும் இடத்தை நாம் போதுமான அளவு பயன்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. உதாரணத்திற்கு, சுவர்கள், பரணை நாம் முழுமையாகப் பயன்படுத்துவதில்லை.
# சமையலறை, படுக்கை அறையில் பரணை ஒட்டி கூடுதல் அலமாரிகள் கட்டலாம்.
# படுக்கை அறை கதவின் உள் புறத்தில் செருப்பு அலமாரியைப் பொருத்தலாம்.
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்
அளவில் சிறிய அறைகளுக்குச் சிறந்த தேர்வு இரட்டை பயன்பாடு கொண்ட பொருள்கள். ஒரே வீட்டையே இரண்டு விதமாகப் பயன்படுத்தும் புத்திசாலித்தனமான வழி இது.
# இப்போது இருவிதமான பயன்பாடு கொண்ட சோஃபாக்கள் கிடைக்கின்றன. அதாவது பகலில் சோஃபாவாகப் பயன்படும் இதை இரவில் கட்டிலாக மாற்றிக்கொள்ள முடியும். முழு கட்டிலை வைக்க இடமில்லாதபோது இதுவே சிறந்த வழி.
# சோஃபா மற்றும் மேஜையாகப் பயன்படும் பொருட்களும் உள்ளன. 2 முதல் 3 பேர் சாய்ந்து அமரலாம் அல்லது 6 நபர்கள் மேஜையாகப் பயன்படுத்தலாம்.
# மாடிப் படிகளில் எழுத்து மேஜையில் உள்ளதுபோல டிராயர்கள் அமைக்கலாம். மரப் படிக்கட்டுகளில் இவ்வாறு அமைக்கும் டிராயர்களில் உங்கள் உடைகள், அழகு சாதனப் பொருள்கள், புத்தகங்கள் எனப் பலவிதமான பொருட்களைப் பயன்படாமல் போகும் இடைவெளியில் வைத்துச் சிறப்பாகப் பயன்படுத்தலாம்.
# அதுபோல கட்டில் மற்றும் சோஃபாக்களும் இப்போது டிராயர்களுடன் கிடைக்கின்றன. கட்டிலின் கீழே டிராயர் வசதிகளுடன் கட்டில்கள் சந்தையில் கிடைக்கின்றன. இதன் அடியில் அழுக்குத் துணிகளை வைத்துக்கொள்ளலாம்.
கண்ணாடிகள் செய்யும் ஜாலம்
இடம் குறுகலாக இருந்தாலும் அகலமாகக் காட்டும் திறன் கண்ணாடிகளுக்கு உண்டு. வரவேற்பறையின் மத்தியில் டீப்பாய் வைத்து அலங்கரிப்பது வழக்கம். அந்த டீப்பாய் மரத்தால் செய்யப்பட்டதாக இல்லாமல் கண்ணாடி டீப்பாயாக இருந்தால் உங்கள் வரவேற்பறை விஸ்தாரமாகக் காட்சி அளிக்கும். அதிலும் டீப்பாயின் முனைகளில் கீழ் நோக்கித் தொங்கும் விதத்தில் அலங்கரிக்கப்பட்ட கண்ணாடிகளைத் தொங்கவிடலாம். இந்தக் கண்ணாடிகளின் பிரதிபலிப்பு அகலமான அறை இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.
செங்குத்தாகச் சிந்தியுங்கள்
வீட்டை அலங்கரிப்பது என்றால், பூ சாடிகளைத் தரையில் அடுக்குவது, பொம்மைகள், ஓவியங்கள் போன்ற அழகு சேர்க்கும் பொருள்களை அலமாரியில் வைப்பது என நினைப்போம். ஆனால் இவற்றைக் கூரையிலிருந்து கட்டித் தொங்கவிடும்போது இடத்தை அடைக்காமல் வீட்டை எளிமையாக அழகுபடுத்தலாம். சமையலறைப் பாத்திரங்களை ஒரு ஸ்க்ரீன் கம்பியில் வரிசையாகத் தொங்கவிட்டால் சமைக்கும் மேடையில் ஏற்படும் இடப் பற்றாக்குறையைச் சமாளிக்கலாம்.
வீடு சிறியதாக இருக்கிறது ஆனால் பொருட்களோ எக்கச்சக்கமாக இருக்கின்றன, எதை எங்கு வைப்பதென்றே புரியவில்லையே என இனிப் புலம்பத் தேவையில்லை.