

கருக்கலைப்புக்கு எதிராகக் கத்தோலிக்க மதகுருமார்கள் தலைமையில் ஆகஸ்ட் 8, 9 தேதிகளில் சென்னையில் பேரணி நடைபெற்றது. அதில் தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கலந்துகொண்டார்.
அதற்கும், ‘குழந்தைகள் கடவுள் அளித்த வரம். அதைப் பெண்களும் குடும்பமும் போற்றிப் பாதுகாக்க வேண்டும்’ எனவும் கருக்கலைப்பைத் தடுப்பதற்கான முயற்சிகள் குறித்து முதல்வரிடம் பேசுவதாக அவர் தெரிவித்த கருத்துக்கும் வலுவான கண்டனங்கள் எழுந்தன.
பெண்களின் அடிப்படை உரிமையையும் கண்ணியத்தையும் இனப்பெருக்க நலனையும் பாதுகாக்கும் வகையில் மருத்துவரீதியான கருக்கலைப்புச் சட்டம் 1971ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்கு முந்தைய பிரிட்டிஷ் சட்டத்தின்படி கருக்கலைப்பு என்பது சட்டவிரோதமானது.
கருத்தடைக் கருவிகள் அந்தக் காலத்தில் பரவலாக இல்லாத நிலையிலும் கருத்தடை அறுவைசிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படாத நிலையிலும் விருப்பமற்ற – வேண்டாத கர்ப்பத்தால் பெண்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர்.
இதனால், முறையற்ற வழிகளில் கருக்கலைப்பு செய்துகொண்டும் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டும் பெண்கள் மாண்டுபோன கொடுமைகள் அரங்கேறின.
பல்வேறு அமைப்புகளின் பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகுதான் மருத்துவரீதியான கருக்கலைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்படியொரு வரலாற்றுப் பின்னணி கொண்ட சட்டத்தில் காலத்துக்கு ஏற்ற மாற்றம் தேவை என்பதற்காக 2021இல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.