தலைமைப் பொறுப்பில் இடமில்லை | பெண்கள் 360

தலைமைப் பொறுப்பில் இடமில்லை | பெண்கள் 360
Updated on
1 min read

தலைமைப் பொறுப்பில் இடமில்லை: அரசியல், அதிகாரப் பொறுப்புகள், நீதி வழங்கும் அமைப்புகள் போன்றவற்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்பட்டால்தான் பெண்களுக்கு நீதி கிடைப்பதற்கான வழிகள் பிறக்கும். ஆனால், நாட்டின் உயரிய அமைப்பான உச்ச நீதிமன்றத்தில் 2026 மார்ச் நிலவரப்படி 4% பெண் நீதிபதிகளே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

75 ஆண்டு கால வரலாறு கொண்ட உச்ச நீதிமன்றத்தில் இதுவரை 11 பெண்கள் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்றம் செயல்படத் தொடங்கி கிட்டத்தட்ட 40 ஆண்டுகளை நெருங்கும்போதுதான் முதல் பெண் நீதிபதியாக பாத்திமா பீவி நியமிக்கப்பட்டார். 2014 வரை ஆறு பெண் நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்தனர். உச்ச நீதிமன்றத்தில் இதுவரை ஒரு பெண்கூடத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படவில்லை.

அதிர்ச்சியளிக்கும் பிணை உத்தரவு: 2025 அக்டோபர் முதல் டிசம்பர் வரை 510 வரதட்சிணைக் கொலை வழக்குகளில் 508 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குப் பிணை வழங்கிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி பங்கஜ் பாட்டியாவின் செயல் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

28 வயதுப் பெண் ஒருவர் திருமணமாகி இரண்டே மாதங்களுக்குள் இறந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு அலகாபாத் நீதிமன்றம் பிணை வழங்கிய வழக்கைக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், “வரதட்சணைக் கொலை போன்ற கொடூரக் குற்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவளிக்கும் விதத்தில் பிணை வழங்கக் காரணம் என்ன” எனவும் கேள்வியெழுப்பியது.

மூன்று மாதங்களில் 99.61% வரதட்சிணைக் கொலை வழக்குகளில் 362 கணவர்கள், 60க்கு மேற்பட்ட மாமனார் - மாமியார், பிற உறவினர்களுக்குப் பிணை வழங்கியிருப்பது பெரும் விவாதமாகியிருக்கிறது. மரணம் நிகழ்ந்த விதம், சூழல் போன்ற எதையுமே கருத்தில்கொள்ளாமல் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் ஒரே மாதிரியான பிணையும் பிணைத் தொகையும் விதித்த நீதிபதி பங்கஜ் பாட்டியா, உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து பிணை கோரும் வரதட்சிணைக் கொலை வழக்குகளைத் தனக்கு ஒதுக்க வேண்டாமென்று உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

தலைமைப் பொறுப்பில் இடமில்லை | பெண்கள் 360
தேர்தல் 2026: பெண்களை மதிக்கும் ‘பெரியோர்’ - வாக்குகளால் பதில் சொல்வோம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in