தேர்தல் 2026: பெண்களை மதிக்கும் ‘பெரியோர்’ - வாக்குகளால் பதில் சொல்வோம்!

தேர்தல் 2026: பெண்களை மதிக்கும் ‘பெரியோர்’ - வாக்குகளால் பதில் சொல்வோம்!
Updated on
2 min read

தேர்தல் காலம் தொடங்கினால்தான் அனைத்துக் கட்சிகளின் கண்களுக்கும் பெண்கள் தெரிவார்கள். பெரியோருக்கு அடுத்தபடியாகத் தாய்மார்களிடம்தான் வாக்குச் சேகரிப்பார்கள். ஏப்ரல் 23 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாட்டுச் சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம் பெண்களுக்கு எதிரான கருத்துகளோடு தொடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி அதிமுகவினர் நடத்திய கூட்டங்களில்தான் இந்தக் கேலிக்கூத்து அரங்கேறியிருக்கிறது.

கனவும் கேலியும்: விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்.பியுமான சி.வி.சண்முகம் பெண்களின் பாதுகாப்புக்காகத் தங்கள் கட்சி முன்னெடுத்தவற்றையோ ஆட்சிக்கு வந்தால் தாங்கள் செயல்படுத்தவிருக்கும் திட்டங்களையோ சொல்லவில்லை. மாறாக, மக்களின் எதிர்காலக் கனவுகள், தேவைகளை அவர்களின் வசிப்பிடத்துக்கே சென்று அறிந்துகொள்ளும் வகையில் தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தை விமர்சித்தார்.

கனவு என்றதும் முன்னாள் பள்ளிக் கல்வி அமைச்சருக்கு ஒரு நடிகைதான் நினைவுக்கு வந்திருக்கிறார். ஒரு நடிகையின் பெயரைக் குறிப்பிட்டு அவர் தனக்கு வேண்டும் என்கிற தன் கனவை முதல்வர் நிறைவேற்றுவாரா எனக் கேட்டு சிரித்தார். அவரது ‘உயர்ந்த’ கனவைச் சிலாகித்துச் சுற்றியிருந்த ஆண்கள் அனைவரும் ஆரவாரத்துடன் கைதட்டி தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். அங்கிருந்த ஒருவர்கூட முன்னாள் அமைச்சரின் கீழ்த்தரமான பேச்சை மறுதலிக்கும் விதத்தில் சிறு முகச்சுளிப்பைக்கூட வெளிப்படுத்தவில்லை.

திண்டுக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர், பெண்களுக்கு வழங்கப்பட்ட இலவச சேலைகளைப் பற்றி மட்டமான கருத்தைத் தெரிவித்தார். மகளிர் தினத்தன்று தன் ஃபேஸ்புக் பக்கத்தில், ‘ஒவ்வொரு தாயின் நிம்மதியும் ஒவ்வொரு சகோதரியின் பாதுகாப்பும் நிச்சயம் உறுதி செய்யப்படும்’ என்று வாழ்த்து தெரிவித்திருந்த அதே நபர்தான், பெண்களின் உள்ளாடை குறித்துப் பெருமிதப்படும் வகையில் முத்தை உதிர்த்தார். அந்தக் கருத்துக்கும் கரவொலி காதைக் கிழித்தது. தலைவர்கள் எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழிதானே.

பெண்ணை மதிக்கும் ‘பெரியோர்’: அண்மைக் கால இந்த இரண்டு சான்றுகளை மட்டும் வைத்துக்கொண்டு ‘இவர்கள்தான் இப்படி; மற்றவர்கள் அனைவரும் நாகரிகமானவர்கள்’ என்று வரையறுத்துவிட முடியாது. பெண்களை இழிவாகப் பேசுவதிலும் நடத்துவதிலும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, மாநிலக் கட்சி, தேசியக் கட்சி என்று எந்தப் பாகுபாடும் இல்லை.

உள்ளூர்க் கூட்டமோ, பிரச்சார மேடையோ, சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ எதுவாக இருந்தாலும் பெண்களை மோசமாகப் பேசுவதற்கும் நடத்துவதற்கும் இடம், பொருள், ஏவல் எதுவும் இவர்களுக்குத் தேவையில்லை. அவ்வளவையும் செய்துவிட்டு வாக்குச் சேகரிக்க வரும்போது மட்டும் இவர்களது சொல்வித்தைகளில் அனைத்துப் பெண்களும் தாயாகவும் சகோதரியாகவும் மகளாகவும் மாறிவிடுவர்கள்.

பெண்ணின் மீது உளப்பூர்வமான மதிப்போ மரியாதையோ இருக்கிற யாரும் பொதுவெளியில் மட்டுமல்ல, தங்களது வீடுகளிலும் பெண்களைக் கண்ணியமாகத்தான் நடத்துவார்கள். ஆனால், நம் ஆணாதிக்கச் சமூகத்தில் பிறப்பிலேயே பேதம் கற்பிக்கப்படுகிற நிலையில் பெண்கள் இரண்டாம் பாலினமாகவும் அடங்கி நடக்கிறவர்களாகவும் போகப் பொருளாகவும் மட்டுமே பார்க்கப்படுகிறார்கள்.

அதனால்தான் ஒரு மாநில முதல்வராக இருந்தவர் தங்களது மாநிலச் சாலைகளை நடிகையின் கன்னத்தைப்போல் சீரமைப்போம் என்று சொல்ல முடிகிறது; தங்கள் கட்சியோடு கூட்டணி வைக்காத கட்சியைக் குறித்து, ‘எங்களைக் காதலித்துவிட்டு மற்றொருவரை மணக்கிறார்கள்’ என்று தேசியக் கட்சியின் தலைவர் ஒருவரால் நாடாளுமன்றத்தில் கூற முடிகிறது.

‘அவர்களோடு நடைபெற்றது கட்டாயத் திருமணம். வன்முறை நிறைந்த அந்த உறவிலிருந்து விவாகரத்து பெறுகிறோம்’ என்று முன்னாள் பிரதமரால் பதில் அளிக்க முடிகிறது. பெண்களையும் அவர்களது வாழ்க்கையையும் நம் அரசியல் தலைவர்கள் மதிக்கிற பாங்கு இதுதான்!

யாருக்கு நம் வாக்கு? - நம் நாட்டில் அனைவரும் கண்ணியமாக வாழ்வதற்கான உரிமை இருக்கிறது என்கிறது அரசமைப்புச் சட்டம். சில நேரம் அதற்கேற்ப பெண்களுக்கான திட்டங்களும் வகுக்கப்படுகின்றன, வியக்கத்தக்க வகையில் சில திட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்தவும்படுகின்றன. சில பெண்களின் வாழ்க்கைத்தரம் ஓரளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஆனால், ஆண்களின் மனதில் தங்கியிருக்கும் கசடுகளும் அரசியலில் புழங்குவோரின் செயல்பாடுகளும் இந்தச் சமூகத்தில் பெண்களின் நிலையை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

பெண்களை வெறும் வாக்கு வங்கிகளாகவும் உடைமைப் பொருளாகவும் பார்க்கிறவர்களுக்குப் பெண்கள் தங்கள் வாக்குகளால்தான் பதில் கூற வேண்டும். உதட்டளவில் பெண்களைப் புகழ்ந்துவிட்டுச் சிந்தனை முழுக்க ஆணாதிக்க அழுக்கு ஊறிக்கிடக்கிறவர்களைக் களையெடுக்கும் கருவியாகவும் பெண்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும். பெண்களுக்கான சீரிய திட்டங்களோடு பெண்களின் மாண்பை உணர்ந்து சமத்துவச் சிந்தனையோடு செயல்படுகிறவர்களுக்கே நம் வாக்கு என்பதில் பெண்கள் உறுதியோடு இருக்க வேண்டும். விரல் நுனியில் இருக்கிறது நம் விடுதலைக்கான விடை.

தேர்தல் 2026: பெண்களை மதிக்கும் ‘பெரியோர்’ - வாக்குகளால் பதில் சொல்வோம்!
திரைகளில் விரியும் தொல்லியல் அதிசயங்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in