

பெண்களுக்கான மலர்: சமூக அரசியல் கலை இலக்கியக் காலாண்டிதழான ‘புதுமலர்’, சர்வதேச மகளிர் நாளை முன்னிட்டு மகளிர் சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. வரலாறு தொடங்கி சமகாலம் வரை பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பு குறித்த கட்டுரைகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. உலகம் முழுவதும் பொதுவுடைமை மலர வேண்டும் என்பதற்காகத் தன் வாழ்நாளெல்லாம் உழைத்த கார்ல் மார்க்ஸின் எல்லாப் பணிகளிலும் துணைநின்ற ஜென்னி மார்க்ஸ் குறித்த கட்டுரை, பெண் எனும் பேராற்றலைத் துலக்கமாக்குகிறது.
பெரியாரைப் பின்பற்றிப் பின்னாளில் தன்னை சுயமரியாதை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட நாகம்மை குறித்த கட்டுரை, பெண்களுக்கான சட்ட உரிமைகள், கல்வியில் பெண்கள் கடந்து வந்த பாதை, மகளிர் தின வரலாறு எனப் பல தலைப்புகளில் அமைந்த கட்டுரைகளும் மாலதி மைத்ரி, இளம்பிறை ஆகிய இருவரது கவிதைகளும் இதழின் நோக்கத்துக்கு வலுசேர்க்கின்றன. (புதுமலர், தொடர்புக்கு: 9443307681)
எங்கும் எதிலும் பாகுபாடு: நாட்டின் வளர்ச் சிக்கும் வளமைக்கும் பெண்கள் முழுமையாகப் பங்களிப்பதைத் தடுக்கும் தடைகள் நாம் நினைத்திருந்ததைவிட அதிகமாக இருப்பதாக உலக வங்கியின் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ‘பெண்கள், வணிகம், சட்டம் 2026’ என்பதை மையமாக வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சமத்துவச் சட்டங்கள், அவற்றைச் செயல்படுத்துவதற்காக வடிவமைக்கப்படும் கொள்கை முடிவுகள், அவற்றின் செயலாக்கம் ஆகிய அனைத்திலும் பாகுபாடு நிலவுவதாகத் தெரியவந்துள்ளது.
சட்டரீதியான உரிமைகளைப் பெறுவதில் உலகம் முழுவதும் பாகுபாடு நிலவுகிறது. உலக அளவில் 4% பெண்களே முழுமையான சட்டரீதியான சமத்துவத்தைப் பெற்றிருக்கிறார்கள். பாலினச் சமத்துவத்தை நிலைநாட்டும் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் வலுவற்ற கட்டமைப்பு, செயலாக்கத்தில் தேக்கம் போன்றவை சட்டத்துக்கும் அவை நடைமுறைப்படுத்தப்படுவதற்கும் இடையே மிகப்பெரிய இடைவெளியை உருவாக்குகின்றன.
உலக அளவில் 190 வகையான தொழில் துறைகளில் பெண்களுக்குச் சமவாய்ப்பு அளிக்கப் படுவதில்லை. பெண்களுக்கான பாதுகாப்புதான் ஆய்வில் மிகவும் குறைவான புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. பல்வேறு பாதுகாப்புச் சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும் மூன்றில் ஒரு பங்கு அடிப்படைப் பாதுகாப்புச் சட்டங்களே உலக அளவில் செயல்வடிவம் பெறுகின்றன.