

ஓர் உறவு முடிவுக்கு வந்துவிட்ட காரணத்தால் அந்த உறவில் நிகழ்ந்த மனமொத்த பாலியல் உறவைக் குற்றமாகக் கருத முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள ஒருவர் தன்னை ஏமாற்றி மணந்துகொண்டதாகவும் ஏழு வருட வாழ்க்கையில் தன்னைப் பாலியல் வல்லுறவுக்கு அந்த நபர் ஆளாக்கியதாகவும் கேரளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
“ஏமாற்றிப் பெறப்பட்ட சம்மதத்துக்கும் மனமொத்து ஒன்றாக இந்துவிட்டு, அந்த உறவு முடிவுக்கு வந்த பிறகு ஏன் பாலியல் உறவுக்குச் சம்மதித்தோம் என்று நினைத்து வருந்துவதற்குமான வேறுபாட்டை மிகத் துல்லியமாக வரையறுக்க வேண்டும்” என நீதிபதி பி.வி.நாகரத்னா தீர்ப்பின்போது தெரிவித்தார்.
பாலியல் வல்லுறவு என்பது பெண்ணுக்கு எதிரான கொடூரக் குற்றம். இதுபோன்ற போலி வழக்குகள் வருகிறபோது ஏராளமான உண்மையான வழக்குகள் வெளிச்சத்துக்கே வராமல் போவது குறித்த கவலையையும் உச்ச நீதிமன்றம் பதிவுசெய்தது.