

பிஹாரைச் சேர்ந்த 28 வயது தொழிலாளி ஒருவர் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட ரயில் விபத்தில் தனது இரண்டு கைகளையும் இழந்தார். இடக்கை தோள்பட்டையிலிருந்து முழுவதுமாகச் சிதைந்த நிலையில் வலக்கை, மணிக்கட்டுவரை துண்டிக்கப்பட்டது. அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு கைகளையும் இழப்பதற்குப் பதிலாக, ஒரு கையையாவது மீட்கும் நோக்கில் ‘கிராஸ் ஹாண்டு டிரான்ஸ்பிளான்டேஷன்’ எனப்படும் கை மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.
துண்டிக்கப்பட்ட இரண்டு கைகளையும் ஒன்றிணைத்துச் செய்யப்படும் சிக்கலான அறுவை சிகிச்சை இது. ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறைத் தலைவர் பி.ராஜேஸ்வரி தலைமையில் மருத்துவர்கள் ரஷீதா பேகம், வளர்மதி, ஸ்வேதா, ஷோனு, அன்னபூரணி, சந்தோஷினி, விக்ரம் அடங்கிய குழு இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. சிகிச்சையின் பலனாக பிஹார் இளைஞரின் வலக்கையில் ரத்த ஓட்டம் சீராகச் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்திய அளவில் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முதல் அரிய வகை கை மாற்று அறுவை சிகிச்சை இது. இதை மேற்கொண்ட எட்டுப் பேர் கொண்ட மருத்துவக் குழுவில் ஏழு பேர் பெண்கள்! சிக்கலான தருணங்களில் சிறப்பாகப் பணியாற்றும் திறமை வாய்ந்தவர்கள் பெண்கள் என்பதை இந்த மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர்.