

நான் ஒரு குடும்பத் தலைவி. எம்.பி.ஏ., படித்திருக்கிறேன். என் கணவர் வெளிநாட்டில் வேலைசெய்கிறார். எங்களது குழந்தைகள் இரண்டு பேரும் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். என் கணவர் அவரது நிறுவனத்தில் விடுமுறை கிடைக்கும்போதெல்லாம் என்னையும் குழந்தைகளையும் பார்க்க எங்களது ஊருக்கு வந்துவிடுவார். அவர் எங்களுடன் இருக்கும் அந்த நாள்கள்தான் எனக்கும் குழந்தைகளுக்கும் பொங்கல், தீபாவளி.
விடுமுறை முடிந்து அவர் சென்றுவிட்டால் ஒருவித வெறுமை என்னை ஆட்கொண்டுவிடும். பிரமை பிடித்ததுபோல் ஆகிவிடுவேன். இதைத் தெரிந்துகொண்ட என் கணவர் நூலகத்திற்குச் சென்று நாவல்களை வாசிக்கச் சொன்னார். அப்படித்தான் வாசிக்கத் தொடங்கினேன். எனக்கு ஜெயகாந்தன் என்றால் மிகவும் பிடிக்கும். அவரது, ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலை ரசித்துப் படித்தேன்.