

கோடிகளைக் கொட்டி நடத்தப்படுகிற அல்லது ஊரார் மெச்ச வேண்டும் என்பதற்காகக் கடன் வாங்கி, பணத்தை வாரியிறைத்து நடத்தப்படும் இந்தியத் திருமணங்களுக்கு மத்தியில் ஆடம்பரத் திருமணச் செலவுகளுக்கு ஆகும் பணத்தில் சொந்தமாக வீடு வாங்கி, அந்த வீட்டிலேயே நெருங்கிய உறவினர்கள் மத்தியில் எளிமையாக திருமணம் செய்துகொண்ட இந்தியத் தம்பதியின் காணொளி கடந்த வாரம் வைரலானது. ‘ஆடம்பரத் திருமணத்துக்குப் பதிலாக நீண்ட காலப் பாதுகாப்பை இந்தத் தம்பதி தேர்ந்தெடுத்திருக்கிறது’ என்கிற குறிப்புடன் மணமகனின் அண்ணன் அந்தக் காணொளியைப் பகிர்ந்திருந்தார்.
இந்தத் தம்பதியும் ஆரம்பத்தில் பிறரைப் போலவே பாரம்பரிய முறைப்படி பிரம்மாண்டமான அலங்காரம், பெரிய விருந்தினர் பட்டியல் என ஆடம்பரமாகத் திருமணம் புரிய முடிவெடுத்திருந்தனராம். செலவுகளைப் பட்டியலிட்ட பிறகு, ஆடம்பரத்தைக் குறைத்துக்கொண்டு அந்தப் பணத்தில் வீடு வாங்கும் விவேக முடிவை எடுத்தனராம்.