

வீட்டில் இருந்தபடியே சமைத்துக் கொடுக்கும் ‘கிளவுட் கிச்சன்’ கொடுத்த வெற்றியால் உணவகத்தைத் தொடங்கினார் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஷ்யாமளா. வெற்றிகரமாகச் செயல்பட்ட உணவகத்தை மூடிவிட்டு ‘கிளவுட் கிச்ச’னையே தொடர்கிறார். அதுவும் வெற்றிக்கான காரணம்தான் என்கிறார் ஷ்யாமளா. இவரது செட்டிநாடு சமையல் ருசிக்கு கோவையில் ரசிகர்கள் ஏராளம். கொங்கு மண்டல உணவை மட்டுமே ருசித்துப் பழக்கப்பட்டவர்களைத் தனது செட்டிநாட்டுச் சுவையில் கட்டிப்போட்டு வைத்துள்ளார் ஷ்யாமளா.
‘செல்லம்மாள் செட்டிநாடு வீட்டு விருந்து’ என்கிற ‘கிளவுட் கிச்ச’னை 2019இல் ஷ்யாமளா தொடங்கியதும் மிக எதேச்சையான நிகழ்வுதான். “நேரத்தைக் கடத்தலாம் என்று சமூக வலைத்தளங்களில் சுற்றிக்கொண்டிருந்தபோது, வீட்டில் இருந்தபடியே சமைத்துக் கொடுக்கிற கன்டென்ட் கண்ணில்பட்டது.
அப்போது உதித்ததுதான் இந்த பிசினஸ் ஐடியா. நான் பரமக்குடியில் இருந்து கோயம்புத்தூர் வந்தபோது, இங்கு கொங்கு மண்டல உணவு வகைகளே பிரபலமாக இருந்தன. எனவே, செட்டிநாட்டுச் சுவையில் உணவைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். கல்லூரிக் காலத்தில் என் சமையலை ருசிப்பவர்கள், ‘நீ ஓட்டல் தொடங்கலாம்’ என்பார்கள். இந்த இரண்டுமே நான் கிளவுட் கிச்சன் தொடங்கப் போதுமானதாக இருந்தன” என்கிறார் ஷ்யாமளா.