

என் கணவருக்குப் புத்தகம் இருந்தால் போதும். அதனால், எப்போதும் என்னிடம் ‘படி.. படி..’ என்று சொல்வார். ஆனால், அவர் சொல்வதை நான் காது கொடுத்துக் கேட்டதில்லை. ஒருநாள் நூலகத்துக்குச் சென்று புத்தகம் எடுத்துவரச் சொன்னார். பிறகு நான் அடிக்கடி நூலகம் சென்று என் கணவருக்காகப் புத்தகங்கள் எடுத்து வந்து கொடுத்தேன்.
நூலகத்துக்குச் செல்லும் போதெல்லாம் அங்கு வருபவர்கள் எல்லாரும் வயதானவர்களாக இருப்பதைப் பார்த்தேன். 80 வயது முதியவர் ஒருவர் நாள்தோறும் தவறாமல் நூலகத்துக்கு வருவார். இவ்வளவு வயதான ஒருவருக்குப் புத்தகத்தின் மேல் ஏன் இவ்வளவு ஆர்வம் உள்ளது என்கிற கேள்வி எழுந்தது. தள்ளாத வயதில் அவரே புத்தகங்களைப் படிக்கிறபோது, நான் ஏன் படிக்கக் கூடாது என்று தோன்றியது. நேரம் கிடைக்கும்போதும் மனம் சரியில்லாத போதும் நூலகத்திற்குச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன்.