மாணவர்களுக்கு வலியுறுத்துகிறேன் | வாசிப்பை நேசிப்போம்

மாணவர்களுக்கு வலியுறுத்துகிறேன் | வாசிப்பை நேசிப்போம்
Updated on
1 min read

பள்ளிப் பருவத்திலேயே வாசிக்கத் தொடங்கினேன். என் அப்பா தினமும் காலையில் நாளிதழைப் படிப்பார். அவரைப் பார்த்து நானும் படிக்கத் தொடங்கினேன். எங்கள் வீட்டில் புத்தகங்களுக்கு என்று தனி அலமாரியை வைத்திருந்தார் அப்பா. அதிலுள்ள புத்தகங்களைப் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. நான் வாசித்த முதல் நாவல் கல்கியின் ‘பார்த்திபன் கனவு’. அதை வாசித்ததும் எனக்கு நாவல்கள் மீது ஆர்வம் அதிகரித்தது.

கல்லூரியில் புத்தக விமர்சனத்துக்காக நான் வாசித்த சு.சமுத்திரத்தின் ‘ஒரு கோட்டுக்கு வெளியே’ என்கிற புத்தகம் என்னை மிகவும் பாதித்தது. சமூக ஏற்றத்தாழ்வுகளை அந்தப் புத்தகம் அழகாக எடுத்துரைத்தது. கல்கி, கி.ராஜநாராயணன், ஜெயகாந்தன், சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன், ராஜேஷ்குமார், ஆயிஷா நடராஜன், மாடசாமி, சிவசங்கரி, சு.வெங்கடேசன் (வேள்பாரி), மதன் (வந்தார்கள் வென்றார்கள்), கு. சிவராமன் (ஆறாம் திணை) ஆகியோர் என்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சுயசரிதை நூலான ‘அக்னிச் சிறகுகள்' எனக்குள் தன்னம்பிக்கையை விதைத்தது.

நான் ஆசிரியராகப் பொறுப்பேற்ற பின் மாணவர்களுக்கு அறிவூட்டும் நல்ல புத்தகங்களை வழங்கிவருவதோடு என்னால் முடிந்த அளவுக்கு வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திவருகிறேன். நம்மை வாழ்க்கையில் நெறிபடப் பயணிக்கச் செய்பவை நல்ல புத்தகங்கள் மட்டுமே.

- நீ. ஐயம்மாள், திருப்போரூர்.

மாணவர்களுக்கு வலியுறுத்துகிறேன் | வாசிப்பை நேசிப்போம்
வெல்லும் பெண்ணைக் கண்டு பதறும் மனங்கள் | பெண் கோணம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in