வீண்போகாத முயற்சி | வாசிப்பை நேசிப்போம்

வீண்போகாத முயற்சி | வாசிப்பை நேசிப்போம்
Updated on
1 min read

நான் மயிலாடுதுறையில் பிறந்து, தருமபுரம் ஆதீனத் தமிழ்க் கல்லூரியில் பயின்று, ஆசிரியர் பயிற்சி முடித்து, கடலூரில் 32 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பணியில் இருந்தபோது தினமும் நாளிதழ்களை வாசித்துப் பெண்ணியம், வேலைவாய்ப்பு, சமூகச் சிந்தனை, சாதனையாளர்கள், அறிவியல், விளையாட்டு ஆகிய தலைப்பிலான செய்திகளைத் தொகுத்து மாணவியருக்குச் சொல்லத் தவறியதில்லை. இது அவர்களின் பொது அறிவை வளர்க்கவும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டவும் உதவும் என்று நம்பினேன்.

ஒருநாள் பத்தாம் வகுப்பு மாணவியரிடம், ‘சட்டப்பேரவைக்கும் நாடாளுமன்றத்துக்கும் என்ன வேறுபாடு? மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் என்ன வேறுபாடு?’ என்று கேட்டேன். கேட்ட பிறகுதான் எனக்கே தெளிவான பதில் தெரியவில்லை எனத் தெரிந்தது. ‘நாளைக்குப் பதில் சொல்கிறேன்; பாடத்தைப் பார்ப்போம்’ என்று சமாளித்துவிட்டேன்.

அன்று இரவே ஒரு வார நாளிதழ்களைப் புரட்டினேன். ஏனோ கலைக் களஞ்சியத்தைப் பார்க்க மறந்துவிட்டேன். கௌரவம் பார்க்காமல் கணவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு மறுநாள் மாணவியரிடம் விளக்கினேன். அதன் பிறகு என்னுடைய செய்தித் தொகுப்பில் அரசியல் செய்திகளும் இடம்பெறத் தொடங்கின. சிறுகதைகள், நாவல்கள் என்று படித்தாலும் மாணவர்களின் முன்னேற்றம் குறித்த கட்டுரைப் புத்தகங்களே என் வாசிப்பில் அதிகம் இடம்பிடித்தன.

சில நேரம் வகுப்பிலேயே தலைப்பு கொடுத்துப் பட்டிமன்றம் போல இயைந்தும் எதிர்த்தும் பேசச் சொல்வேன். இவையெல்லாம் தங்களை எப்படி மாற்றிவிட்டன என்பதை உயர் பதவிகளில் இருக்கிற மாணவியர் நேரிலோ அலைபேசியிலோ சொல்கிறபோது என் முயற்சி வீண் போகவில்லை என்பதை உணர்ந்து மகிழ்ந்தேன்.

- ச. மீனாட்சி, கடலூர்.

வீண்போகாத முயற்சி | வாசிப்பை நேசிப்போம்
மிதக்கும் வீட்டில் ஒருநாள்! | புதிய வானம் புதிய பூமி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in