

நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய இயற்கை எழில் நிறைந்த, குறைவில்லாமல் எப்போதும் காற்று வீசுகின்ற பணகுடியைச் சேர்ந்த எனக்குப் பள்ளிப் பருவத்திலேயே புத்தகங்கள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. படிப்பு முடிந்து வீட்டிலிருந்த பதின்ம வயதுகளில் கல்கி, நா.பார்த்தசாரதி, அகிலன், சாண்டில்யன், ஜெயகாந்தன் போன்றோரது நாவல்களைப் படித்து மகிழ்ந்தேன்.
லட்சுமி, இந்துமதி, சிவசங்கரி, ராஜம்கிருஷ்ணன் போன்றோரது படைப்புகளின்வழி பெண்ணுலகைப் படித்தேன். காண்டேகர், சரத்சந்திரர், தாகூர், எண்டமூரி வீரேந்திரநாத் எனப் பிற மொழி நாவல்களையும் படித்தேன். எல்லாமே நூலகங்களில் எடுத்துப் படித்தவை.