வணக்கத்துக்குரிய வயோதிகத் தாய்கள்! | பெண் கோணம்

வாரம் ஒரு விருந்தினர்
வணக்கத்துக்குரிய வயோதிகத் தாய்கள்! | பெண் கோணம்
Updated on
3 min read

மரங்களும்கூடக் கடுங்காற்றில் தாக்குப்பிடித்துத் தண்ணீரையும் சத்துகளையும் உறிஞ்சித் தன்னை உயர்த்திவிட்ட வேர்களுக்கு இயல்பாகவே நிழலாகிவிடுவதை நாம் பார்த்து மகிழ்கிறோம். அந்த நிழல் பிற உயிர்களுக்கும் குடையாகத் தன் காலம் முழுவதும் உதவி நிற்கிறது.

இப்படி மரத்தின் பண்போடுகூட நாம் இல்லாமல் போய்விட்டோமோ என்பதைத்தான் பெரும்பான்மையான முதியவர்கள் தனிமையாகத் தள்ளாடி நடப்பதைப் பார்க்க நேரிடும் போதெல்லாம் நினைத்துக்கொள்கிறது மனம்.

உண்மையில் இந்நிலைக்கு அவர்கள் ஏதாவது ஒரு காரணத்தால் தள்ளப்பட்டு விடுபவர் களாகத்தான் இருக்கிறார்கள் பெரும்பாலும்.

சிறு வயதில் நான் பார்த்த அத்தனை வீடுகளிலும் முதியோர்கள் இருந்தார்கள். கூடவே குடும்பத்திலுள்ள அனைவராலும் அவர்கள் மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்தப்பட்டார்கள்.

இன்று தள்ளாடும் வயோதிகத்துடன் தனித்தனியாக நிற்கும் முதியவர்களைப் பார்ப்பதற்கே வருத்தமாக இருக்கிறது. அதிலும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களால் ஏதேதோ காரணங்களால் தனித்து வாழ்கிற மூதாட்டிகளை நான் பணிபுரிந்த ஒவ்வொரு பள்ளியிலும் சந்தித்திருக்கிறேன். சந்தித்துக்கொண்டும் இருக்கிறேன்.

அரவணைக்கும் பாட்டிகள்: இவ்வளவு முதுமையில் அவர்கள் தனியாக வாழ்வதே பெரிய போராட்டம் என்கிறபோதிலும் தன் மகன் அல்லது மகள்வழிப் பேரக் குழந்தைகளை வேறு எவரின் உதவியும் இன்றி இவர்கள் மட்டுமே வளர்க்கிற நிர்பந்தத்திலும் சூழ்நிலையிலும் சிலர் இன்னும் கூடுதலாகத் தீராத அல்லல்களுடன் வாழ்கின்றனர்.

உண்மையில் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் மனதளவில் அவர்களே ஒரு குழந்தையைப் போல் மாறிவிடும் காலம். வாய்க்கு ருசியாகச் சாப்பிடவும் உடன் அமர்ந்து பேசவும் தன்னைக் கவனிக்கவுமே யாராவது இருக்க வேண்டிய நிலையில் இருக்கும் அவர்கள், குழந்தைகளைப் பொறுப்பேற்று வளர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர்களாக இருக்கின்றனர்.

எனினும் ஏதோ ஒரு வைராக்கியத்தில் எப்படியும் இந்தக் குழந்தைகளை வளர்த்துவிடலாம் என பெரும்பாலும் இரண்டு குழந்தைகளை அன்றாடம் அழைத்து வந்து பள்ளியில் விட்டு அழைத்துச் செல்லும் இப்படிப்பட்ட வயோதிகப் பெண்களின் நிலை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குச் சிரமங்களும் வருத்தங்களும் நிறைந்தது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in