

வாக்களிக்காத ஒவ்வொரு பெண்ணும் ஒரு குரலை இழக்கிறார்; வாக்களிக்கும் ஒவ்வொரு பெண்ணும் ஒரு வரலாற்றை எழுதுகிறார். இந்தியாவில் நடந்த முதல் தேர்தலில் வாக்களிக்கச் சென்ற அனுபவத்தை என் பாட்டி சொல்லும்போது அது ஒரு சாதாரண நினைவாக இருக்காது. ஓர் உரிமையை முதன்முறையாக நிலைநாட்டிய பெருமையாகவே தோன்றும். வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்ல வண்டி அனுப்பியிருந்தாலும் நடந்தே வருவதாக அவர் உறுதியாக மறுத்தாராம். யாருக்கு வாக்களித்தார் என்பதையும் அவர் ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டார். அந்த மௌனத்தில் ஒரு கர்வம் இருந்தது.
அந்தக் காலத்தில் பெண்களின் வாக்கு அவர்களுடைய தல்ல; வீட்டிலுள்ள ஆண்களின் விருப்பத்தின் நீட்டிப்பாகவே கருதப்பட்டது. ஆனால், என் பாட்டி அந்த அழுத்தங்களை அமைதியாகத் தாண்டித் தன் விருப்பப்படி வாக்களித்தார். தன் உரிமையை உணர்ந்து பயன்படுத்தினார்.
ஒரு பெண் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்கும் அந்தச் சிறிய செயல், வெளிப்படையாகப் பார்த்தால் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், உண்மையில் அது ஒரு சமூகத்தின் திசையை நிர்ணயிக்கும் பெரிய முடிவு.
வாக்குரிமை வரலாறு:
பெண்களின் வாக்குரிமை என்பது உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் கிடைத்த ஒன்றல்ல; பல ஆண்டுப் போராட்டத்தின் விளைவு. அமெரிக்காவில் 1920இல் பெண்களுக்குச் சட்டரீதியான வாக்குரிமை கிடைத்தது. ஆனால், அந்த உரிமை நடைமுறையில் பலருக்குக் கிடைக்கவில்லை; குறிப்பாக ஆப்ரிக்க அமெரிக்கப் பெண்கள் பல தடைகள், அச்சுறுத்தல்கள், சட்டச் சிக்கல்கள் ஆகியவற்றை எதிர்கொண்டனர். 1965 வாக்குரிமைச் சட்டத்துக்குப் பிறகே அந்தத் தடை அகன்றது.
இங்கிலாந்தில் 1918இல் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆனால், வயது, சொத்து போன்ற நிபந்தனைகளுடன்தான் அது இருந்தது. 1928இல்தான் ஆண்களுக்கு இணையான வாக்குரிமை கிடைத்தது. உலகின் பல பகுதிகளிலும் இதேபோன்ற நிலைதான். இந்தப் பின்னணியில் இந்தியாவில் நடந்ததே வேறு. 1950இல் அரசமைப்பு அமலுக்கு வந்த அந்தத் தருணத்திலேயே சாதி, மதம், கல்வி, வர்க்கம் ஆகிய எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்துப் பெண்களுக்கும் சமமான வாக்குரிமை வழங்கப்பட்டது. அந்த முடிவு, இந்திய ஜனநாயகத்தின் ஆழமான அடித்தளத்தைக் காட்டியது.
நடைமுறை எதார்த்தம்:
போராடிப் பெறவில்லை என்பதாலோ என்னவோ இன்றும் பல பெண்கள் வாக்களிப்பதில்லை. “என் ஒரு வாக்கால் என்ன மாறப்போகிறது?” என்கிற கேள்வி அவர்களிடம் இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் ஆயிரக்கணக்கான ‘ஒரு வாக்கு’கள் சேர்ந்தே ஒரு முடிவு உருவாகிறது. அந்த ஒரு வாக்கை நாம் வீணடித்தால், அது நம் குரலின் ஒரு பகுதியை இழந்ததற்குச் சமம்.
மேலும், பொய்யான வாக்குறுதிகள், சிறு சலுகைகள், மறைமுக அழுத்தங்கள் போன்றவை பெண்களின் வாக்கைப் பாதிக்க முயல்கின்றன. சில நேரம் குடும்பத்துக்குள் இருக்கும் கருத்துகளும் பெண்களின் சுய முடிவை மறைக்கின்றன. ஆனால், ஒரு பெண் வாக்களிப்பது தனிப்பட்ட செயல் அல்ல; அது சமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அரசியல் செயல்பாடு. அது எண்ணிக்கை மட்டும் அல்ல; அது ஒரு வலுவான குரல்.
விவேகமான வாக்கு:
இன்று கல்வியறிவு பெற்ற பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதற்கேற்ற பொறுப்புணர்வும் வளர வேண்டும். வேட்பாளர்களின் வாக்குறுதி களோடு அவர்களின் செயல்பாடுகளையும் நாம் மதிப்பீடு செய்ய வேண்டும். பெண்கள் வாக்களிப்பதைத் தவிர்ப்பதற்கு இன்னொரு காரணம், ‘எல்லாரும் ஒரே மாதிரிதான்; யாரைத் தேர்வு செய்வது?’ என்கிற குழப்பம். இதற்கும் ஒரு தீர்வு இருக்கிறது.
வேட்பாளர்களின் பின்னணியைப் பாருங்கள். அவர்கள் முன்பு செய்த வேலைகளை மதிப்பிடுங்கள். அவர்களின் அணுகுமுறை, நம்பகத்தன்மை ஆகியவற்றை ஆராயுங்கள். அதன் பிறகு முடிவை எடுங்கள். உணர்வுவயப்பட்டு முடிவெடுக்க வேண்டாம்; திட்டவட்டமான ஆதாரங்களால் வழிநடத்தப்படும் வாக்கே வலிமையானது. குறிப்பாக உள்ளூர் தேர்தல்களில் நம்முடன் இருக்கிறவர்களையும் எளிதில் அணுகக்கூடியவர்களையும் தேர்ந்தெடுப்பது நம் அன்றாட வாழ்க்கையில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.
நம் வாக்கு, நம் உரிமை:
தேர்தல் நாள் ஒரு விடுமுறை நாள் அல்ல. அது நமது உரிமையை நிwனைவுபடுத்தும் நாள். நமது குரலை வெளிப்படுத்தும் நாள். மாற்றத்தை உருவாக்கும் வலிமை கொண்டது பெண்களின் வாக்கு என்பதை நிரூபிக்கும் நாள். பெண்கள் குழுவாகச் செயல்படும்போது அதிக வலிமை பெறுகிறார்கள். நண்பர்கள், அக்கம் பக்கத்தினர், குடும்பத்தினர் எனப் பெண்கள் சேர்ந்து வாக்களிக்கச் செல்லும் ஒரு கலாச்சாரத்தை உருவாக்கலாம். அது ஒரு பொதுச் செயலாக மட்டுமல்லாமல் ஒற்றுமையின் வெளிப்பாடாகவும் மாறும். பெண்கள் வாக்களித்தால் சமூகத்தின் திசை மாறும் என்கிற நம்பிக்கை அப்போது உருவாகும்.
பெரியவர்கள் வாக்களிக்கச் செல்வதைப் பார்த்து இளம் தலைமுறை கற்றுக்கொள்கிறது. ஒரு தாய் வாக்களிக்கச் செல்லும்போது, அது ஒரு குடும்பத்தை விழிப்புணர்வு உடையதாக ஆக்குகிறது. ஒரு பெண் தனது வாக்கை மதிக்கும்போது, அது அடுத்த தலைமுறைக்கு ஒரு பாடமாக மாறுகிறது. அதனால், வாக்களிப்பது ஒரு நாள் நிகழ்ச்சி அல்ல; அது ஒரு சிந்தனை. ஒரு விழிப்புணர்வு. ஒரு நிலைப்பாடு. நம் பாட்டிகள் பெற்ற அந்த உரிமை நம் கைகளில் ஒரு வாய்ப்பாக மாறியுள்ளது. அதை மதிப்பது நம் பொறுப்பு.
- பத்மஜா நாராயணன், மொழிபெயர்ப்பாளர்
kpadmajanarayanan@gmail.com