

மாநில அரசின் சட்டமன்றங் களிலும் மத்திய அரசின் நாடாளுமன்றத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு (33.33%) பதவிகளாவது பெண்களுக்கு உறுதிசெய்யப்பட வேண்டும் (Reservation for Women) என்கிற நியாயமான, சமூக நீதி கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தங்கள் கோரிக்கையை முன்னிறுத்திப் பெண்களும் பெண்கள் அமைப்புகளும் பிற ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து நாடு தழுவிய அளவில் நடத்திய கருத்தரங்கங்களும் மேற்கொண்ட போராட்டங்களும் எழுத்துவடிவ விவாதங்களும் ஏராளம். என்றாலும், பெண்களின் அரசியல் ஜனநாயகத்துக்கான இந்தக் கோரிக்கை, ஆழ்கடலில் வீசப்பட்ட கல்லாகவே மூழ்கிக்கிடக்கிறது.
அரசுகளின் இத்தகைய பாராமுகப் போக்குக்கு அனைத்து ஆண்ட - ஆண்டுகொண்டிருக்கின்ற அரசியல் கட்சிகளும் உடந்தையே! அவர்களின் இத்தகைய போக்கு, ‘பெண்களுக்கு அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் கல்வியையும் சொத்துரிமையையும் வழங்கக் கூடாது’ என்கிற மநுதர்ம சாத்திரத்தின் நீட்சியே. ‘இந்தியச் சமூகச் சாதிக்கட்டமைப்பில் ஒடுக்கப்பட்டவர்கள் நிலையும் பெண்களின் நிலையும் ஒன்றுதான்’ என்று முழங்கியவர் அண்ணல் அம்பேத்கர்.