

கேரள மாநிலம் வடகரா பகுதியைச் சேர்ந்தவர் ஷிம்ஜிதா. இவர் கடந்த ஜனவரி 16 அன்று கண்ணூருக்குப் பேருந்தில் பயணம் செய்தபோது தீபக் என்பவர் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஒரே நாளில் அந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்தனர். தீபக்கின் செயலைக் கண்டித்துப் பலரும் சமூக வலைத்தளங்களில் மோசமான கருத்துகளைப் பதிவிட்டனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தீபக், ஜனவரி 18 அன்று தன்னை மாய்த்துக்கொண்டார். தங்கள் மகனைத் தற்கொலைக்குத் தூண்டிய ஷிம்ஜிதா மீது நடவடிக்கை எடுக்கும்படி தீபக்கின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சமூக வலைத்தளங்களிலும் பொது வெளியிலும் ஷிம்ஜிதாவுக்கு எதிராகப் பலர் கருத்துத் தெரிவித்தனர்.
ஷிம்ஜிதா தனது சமூக வலைத்தளக் கணக்குகளை முடக்கிவிட்டுத் தலைமறைவானார். அவரைக் காவல்துறையினர் ஜனவரி 21 அன்று கைது செய்தனர். அறிவியல்பூர்வ ஆதாரத்துக்காக ஷிம்ஜி தாவின் திறன்பேசியைக் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அவர் வெளியிட்ட வீடியோ எடிட் செய்யப்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. வீடியோ எடுக்கப்பட்ட அன்று பணியில் இருந்த பேருந்து ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பாலியல் சீண்டல் குறித்து அன்றைக்குத் தங்களிடம் ஷிம்ஜிதா புகார் எதுவும் தெரிவிக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.