

சமையல் கலைக்கு எடுத்துக்காட்டு சொல்பவர்கள் நள மகராஜாவைத்தான் குறிப்பிடுவார்கள். அதற்கு ஏற்ற மாதிரி பெரிய பெரிய நட்சத்திர உணவகங்களில் ஆண்கள்தான் முதன்மைச் சமையல் நிபுணர்களாக இருப்பார்கள். அதனால், வீட்டில் ஆண்கள் சமையல் செய்வது தவறல்ல.
வாரத்துக்கு ஒரு நாளாவது மனைவி அல்லது அம்மாவுக்கு விடுப்பு அளித்துவிட்டு ஆண்கள் சமைத்துப் பரிமாறும்போது குடும்பத்துக்குள் அன்னியோன்யம் பெருகுவதோடு வித்தியாசமான சுவையுள்ள உணவும் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுக்குள் புரிதல் மேம்படும். இதைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கும் வீட்டு வேலைகளில் ஈடுபடும் மனப்பக்குவம் மலரும்.
மாதத்துக்கு ஒரு முறை வீட்டில் ஒட்டடை அடிப்பது, கழிவறைகளைச் சுத்தம் செய்வது போன்றவற்றை ஆண்கள் செய்யும்போது பெண்களுக்கு நம் மதிப்பும் மரியாதையும் கூடும். நாம் வீட்டு வேலைகளைச் செய்தால் பக்கத்து வீட்டுக்காரர்கள், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று ஆண்கள் யோசிக்கத் தேவையே இல்லை.- ஜி. சத்தியமூர்த்தி, கும்பகோணம்.