

சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவு உதவி மேலாளராகப் பணிபுரிந்து வருகிறேன். எங்கள் இருவீட்டாரின் பெற்றோரும் பொதுவுடைமை அமைப்பின் செயல்பாட்டாளர்களாக இருந்ததால் சாதி, சடங்கு, சம்பிரதாயங்களுக்கு இடமின்றி, தாலி அணிவிக்காமல், இருவீட்டாரின் பாட்டிகள் முன்னிலையில் எங்கள் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 21 ஆண்டுகள் கடந்துவிட்டன. எனது இணையர் வழக்குரைஞராக உள்ளார்.
எங்கள் வீட்டில் சிறுவயது முதலே அவரவர் வேலைகளை அவரவரே செய்ய வேண்டும் என்பதுதான் நிபந்தனை. சாப்பிட்ட தட்டுகளை அவரவரே துலக்கி வைத்தல், துணிகளைத் துவைத்தல், சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் உணவை எடுத்துவைத்தல், இரவு உணவுக்கு அனைவரும் வரும்வரை காத்திருந்து ஒன்றாக அமர்ந்து பகிர்ந்து உண்ணுதல், இரவு உறங்கச் செல்வதற்கு முன் வீட்டைக் கூட்டிச் சுத்தம் செய்தல், படுக்கை விரிப்புகள், தலையணை போன்றவற்றைப் பயன்படுத்திய பிறகு மடித்து எடுத்து வைத்தல் எனப் பல வேலைகளை அந்தப் பருவத்தில் கட்டாயத்தின் பெயரில்தான் செய்துவந்தேன்.
திருமணத்துக்குப் பிறகு இணையரின் வேலை, குழந்தை பராமரிப்பு காரணமாக என் மாமனார் வீட்டுக்கு அருகில் குடிபெயர்ந்தோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் எனது மைத்துனருக்கும் திருமணம் நடைபெற்றது. வாடகைச் சுமையைக் குறைப்பதற்காக அதே பகுதியில் ஒரே வீட்டை வாடகைக்கு எடுத்து, கூட்டுக் குடும்பமாக வாழத் தொடங்கினோம். என் மாமனார்தான் எங்கள் வீட்டின் அன்றைய ‘பிக்பாஸ்’. ஒரே வீட்டில் மூன்று குடும்பங்கள் வசித்ததால் வாடகை, காய்கறி–மளிகைப் பொருள்கள், சமையல், வீட்டுப் பராமரிப்பு என அனைத்தையும் பகிர்ந்துகொள்ள வேலைகளைப் பிரித்துக்கொண்டோம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எங்கள் ‘பிக்பாஸ்’ தலைமையில் அனைவரும் கூடி, தேவையான மாற்றங்கள் குறித்து விவாதித்து, வேலைப் பிரிவுகளில் மாற்றங்களைச் செய்வோம்.
குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் அன்றாட, வாராந்திர, மாதாந்திர வேலைகள் எனப் பட்டியல் போட்டுக் குடும்பமாகச் செய்தோம். பொறுப்பேற்றுக் கொண்டவரால் ஒரு வேலையைச் செய்ய முடியவில்லை என்றால், அந்தக் குடும்பத்தின் மற்றோர் உறுப்பினர் அதைச் செய்து முடிக்க வேண்டும். வாரம்தோறும் சுழற்சி முறையில் வேலைகளை ஒவ்வொரு குடும்பமும் பொறுப்பேற்றுச் செய்தது. நானும் மனைவியும் வேலைகளைப் பகிர்ந்து செய்யத் தொடங்கினோம். இப்படியே ஐந்து ஆண்டுகள் ஓடின.
வேலையில் இடமாற்றம், மாமனார் மறைவு போன்ற காரணங்களால் மீண்டும் தனிக்குடித்தனம். மாமியார் எங்களுடன் வசிக்கிறார். இன்றைக்கும் வீட்டு வேலைகளில் எனக்கான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் செய்துவருகிறேன். தினமும் எழுந்தவுடன் அனைவருக்கும் தேநீர் போடுவது, பாத்திரங்களைத் துலக்கி வைப்பது, வீடு கூட்டுவது, தேங்காய் துருவித் தருவது, இரவு சிற்றுண்டி தயாரிப்பது என அன்றாட வேலைகளோடு வாராந்திர, மாதாந்திர வேலைகளையும் பட்டியல் போட்டுச் செய்கிறேன். வீட்டு வேலைகளில் உதவுவதற்காகப் பிள்ளைகளுக்கும் சிறு சிறு பொறுப்புகளைக் கொடுத்துப் பழக்கப்படுத்தி வருகிறேன்.
வீட்டு வேலைகளை மகிழ்ச்சியுடன் செய்ய எனக்கு மிகவும் கைகொடுத்தது சிறுவயதில் நான் பழகிய வேலை முறைகளும் திருமணத்துக்குப் பிறகு ஏற்றுக்கொண்ட வாழ்க்கைமுறையும்தான். எனவே, நாம் அடுத்த தலைமுறையினருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
- மு.முகிலன், சென்னை.