

ஒவ்வொரு நாளும் பின் தூங்கி முன் எழுபவர்கள் பெண்கள். வீட்டின் அனைத்து வேலைகளையும் நாள்தோறும் செய்து முடித்துவிட்டு அதன் பிறகு பணிக்குச் செல்லும் பெண்களும் ஏராளம். ஆனால், ஒவ்வொரு நாளும் வழக்கமாக வீட்டுக்குத் தேவையானவற்றை மனைவி சொல்படி வாங்கி வந்துவிட்டால் என்னுடைய வேலை முடிந்துவிட்டது என நினைத்துக்கொள்வேன்.
ஆனால் நாள்தோறும் வீட்டு வேலை, சமையல் வேலை, துணி துவைப்பது, பாத்திரம் சுத்தம் செய்வது என அனைத்து வேலைகளையும் என்னுடைய மனைவியே செய்துவருகிறார். வீட்டு வேலைகளிலும் பிற வேலைகளிலும் போதிய அனுபவமும் ஆர்வமும் இல்லாமல் இருந்து வந்தேன்.
மனைவி மட்டுமே சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையைப்பார்த்து சமீப காலமாக அவ்வப்போது தேவையான உதவிகளைச் செய்துவருகிறேன். அந்தச் சின்ன சின்ன உதவிகள்கூட என்னுடைய மனைவிக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் தருகின்றன. இன்னும் அதிகப்படியான வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொண்டால் மனைவியின் வேலைப் பளுவும் குறையும், நமக்கும் வீட்டு வேலை செய்த திருப்தி ஏற்படும் என்பதை உணர்கிறேன். ஆர்வமாகச் சில நேரம் உதவுகிறபோது மனைவி அதில் ஏதாவது குறைகள் கண்டுபிடித்துக் குற்றம் சொல்வதால் அந்த வேலைகள் செய்வதில் ஆர்வம் இல்லாமல் ஒதுங்கிக்கொள்வேன்.
இப்போது குறைகள் சொல்வதை அவர் நிறுத்திக்கொண்டதால் எனக்குத் தெரிந்தவரைக்கும் வீட்டு வேலைகளில் உதவியாக இருந்துவருகிறேன். இனி சமையலறைப் பக்கம் சென்றுவிட்டால் அதுவும் என்னுடைய கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும் என்று நினைக்கிறேன். நான் வீட்டு வேலைகளைச் செய்யும் திறமையைப் பொறுத்துத் தான் கூடுதல் பொறுப்புகள் கிடைக்குமா, இல்லையா என்பதை மனைவி முடிவெடுப்பார்!
- மா. பழனி, தருமபுரி