

நான் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறேன். திருமணம் ஆன நாளிலிருந்து எனக்குள் ஓர் ஆதங்கம். வீட்டு வேலைகளில் மிகவும் நேர்த்தியை எதிர்பார்ப்பேன். வீடு சார்ந்த எந்த வேலையாக இருந்தாலும் அதில் எனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என மெனக்கெடுவேன். பாத்திரம் கழுவுவதில் எப்போதுமே திருப்தி அடையாதவன் நான். அதைப் பற்றி மனைவியிடம் சொன்னால், ‘நீங்களே கழுவிப் பாருங்கள்’ என ஆரம்பித்து அது சண்டையில் போய் முடிந்துவிடும்.
திருமணத்துக்கு முன் என் மனைவி செவிலியர் பட்டப் படிப்பு படித்து வேலைக்குச் சென்று வந்தார். திருமணம் - பிள்ளைகள் என அடுத்தடுத்துக் குடும்பம் சார்ந்து இயங்க வேண்டிய சூழல். தற்போது பிள்ளைகள் வளர்ந்துவிட்ட நிலையில் வேலைக்குச் செல்வதைப் பற்றி மனைவியிடம் பேச அவரும் சட்டென ஒரு வேலையைத் தேடிக்கொண்டார். இப்போதெல்லாம் பாத்திரம் கழுவ எவ்வளவு பொறுமையும் நிதானமும் தேவை என்பதை எனது அனுபவத்தின் வாயிலாகக் கண்டுகொண்டேன். எந்த வேலையையும் வெளியே நின்று விமர்சனம் செய்வது எளிது. அதைச் செய்து பார்த்தால்தானே புரியும்.
கடந்த இரண்டு வருடங்களாக எங்கள் வீட்டில் பாத்திரம் துலக்குவது என் பணி. நட்பு வட்டங்களில் இதைச் சொல்லும்போது, ‘இதையெல்லாமா பொதுவெளியில் பேசுவது?’ என்று பெண் ஆசிரியர்கள் உள்படச் சிரிக்கின்றனர். ஆனால், வீட்டு வேலையைப் பகிர்வதில்தானே எனக்கு மகிழ்ச்சி என வெளிப்படையாகவே பெருமைபடப் பேசுகிறேன். இது வெறும் பாத்திரம் துலக்கும் செயல் மட்டும் அல்ல; என் மனைவி கடந்த 17 ஆண்டுகளாகத் தனியொரு ஆளாகச் செய்த சேவைக்கு எனது சிறிய கைமாறு!- வெ. முருகதாஸ், சேத்துப்பட்டு, திருவண்ணாமலை.