

என் கதை பிறரது கதையில் இருந்து சிறிது வேறுபட்டது. எனது 27ஆவது வயதில் 1999இல் ஆசிரியராகப் பணியேற்ற நாள்வரை எனக்கு வெந்நீர் வைக்கக்கூடத் தெரியாது. ஆசிரியராக இருந்த என் அப்பா சு.சத்தியநாதன் கொள்கைப்படி சமையல் செய்யும் நேரத்தில் சமைப்பவரைத் தவிர ஆண் பிள்ளையோ, பெண் பிள்ளையோ யாரும் சமையல் அறைக்குள் செல்லக் கூடாது. அதனால், அப்போதுவரை எனக்குச் சமையலின் அரிச்சுவடிகூடத் தெரியாது.
காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் கூனங்கரணை அரசுத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக நான் பணியேற்றபோது எங்கள் பக்கத்து ஊரான பெரியசாமிபுரத்தைச் சேர்ந்த தம்பி அந்தோணி பாக்கிய லூர்துராஜுவும் அண்மைப் பள்ளியில் அதே நாளில் பணியேற்றார். நாங்கள் இரண்டு பேரும் வீடு எடுத்துத் தங்கினோம். முதல் மாதம் மூன்று வேளையும் கடையில் சாப்பிட்டோம். நண்பருக்குச் சமையல் தெரியும் என்பதால் மறு மாதம் முதல் சமைக்கத் தொடங்கினோம்.
முதலில் சைவம், அடுத்து அசைவம் என அனைத்தும் சமைக்கத் தொடங்கினோம். அவரைப் பார்த்து நானும் கொஞ்சம் கொஞ்சமாகச் சமைக்கக் கற்றுக்கொண்டேன். இன்று சைவம், அசைவம் இரண்டும் நன்றாகச் சமைப்பேன். அதிலும் கடல் உணவை மிகவும் சிறப்பாகச் சமைப்பேன்.
இப்போது எனக்கு 54 வயது. திருமணம் செய்து கொள்ளவில்லை. அம்மா, அப்பாவும் இறந்துவிட்டார்கள். உடன்பிறப்புகளும் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் இருக்கிறார்கள். இன்று எல்லா நாளும் எனக்குப் பிடித்த உணவை விதவிதமாகச் சமைத்துச் சாப்பிடுகிறேன் என்றால் அன்று நான் கற்ற சமையலே காரணம்.
பள்ளி நாள்கள் என்றால் ஐந்து மணிக்கு எழுந்து சமையல் வேலையைச் சுறுசுறுப்பாகத் தொடங்கிவிடுவேன். காலை ஏழு மணிக்குள் சோறு வைத்து, ஒரு குழம்பு, கூட்டு செய்து சரியான நேரத்தில் பள்ளிக்குப் புறப்படுகிறேன். நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தால் கடல் உணவைச் சமைத்துக் கொடுப்பேன்.
இறால், கணவாய், மீன், மீன் புட்டு போன்றவை என் சமையலில் நண்பர்களுக்குப் பிடித்தமானவை. உணவுக்காக யாரையும் சாராமல் வாழ்வதற்கு, நான் கற்றுக்கொண்ட சமையலே காரணம். நானே சமைத்துச் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியமும் பராமரிக்கப்படுகிறது.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.