

சமூகத்தில் மாற்றம் நிகழ வேண்டுமெனில் அது அடித்தளத்தில் இருந்து தொடங்க வேண்டும் எனக் குழந்தைகளிடம் இருந்து மாற்றத்தை நிகழ்த்தத் தொடங்கியவர் ஓவிய ஆசிரியர் கிருத்திகா. குரலற்ற சிறப்புக் குழந்தைகள், பழங்குடியினக் குழந்தைகளுக்கு இயற்கை நிறங்களை மையமாகக் கொண்டு ஓவியம் வரைதல், களிமண்ணில் கைவினைப் பொருள்கள் செய்தல் எனப் பல கலைகளை கிருத்திகா பயிற்றுவித்து வருகிறார்.
கோயம்புத்தூரைப் பூர்விகமாகக் கொண்ட இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப ஊழியராகப் பணியாற்றினார். கலை மீது கொண்ட ஆர்வத்தால் வேலையை விட்டுவிட்டு முழுநேர ஓவிய ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கியுள்ளார். சிறுவயது முதலே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்ட இவர் அதைத் தன்னிச்சையாகக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் மீதான இவரது காதல் நீலகிரி, மகாராஷ்டிரம் என நீண்ட தூரம் இவரைப் பயணிக்க வைத்தது.
சிறப்பு வகுப்பு: மண்பாண்டக் கலை நவீன யுகத்துக்கேற்ப உருமாற்றப்பட்டதன் விளைவாக, மண்ணால் செய்யப்படும் பொருள்களைத் தற்போது இளையோர் முதல் முதியோர்வரை ரசித்து வருகின்றனர். அந்த ரசனையையே தனது ஆயுதமாக மாற்றிய கிருத்திகா, சிறப்புக் குழந்தைகளின் திறனுக்கேற்றவாறு மண்ணில் சிறு சிறு கலைப்பொருள்கள் செய்வது குறித்துக் கற்பித்து வருகிறார்.