

என் ஐயா (அப்பாவின் அப்பா) சாப்பிட்ட தட்டில்தான் கையைக் கழுவுவார். என் அப்பத்தா அந்தத் தட்டை எடுத்துச் சென்று கழுவுவார். என் அப்பாவும்கூடச் சாப்பிட்ட தட்டிலேயேதான் கையைக் கழுவுவார். அப்பத்தா செய்ததைத்தான் அம்மாவும் செய்தார். குறிப்பிட்ட காலம்வரை நானும் சாப்பிட்ட தட்டில்தான் கையைக் கழுவிவந்தேன்.
அதையும் என் அம்மாதான் எடுத்துச் சென்று கழுவி வைப்பார். 14 வயதுவரை கிராமத்தில்தான் வாழ்ந்தேன். அங்கே ஆண், பெண் பாகுபாடு அதிகம். வேலைகளில் ஆணுக்கு உரியவை என்றும் பெண்ணுக்கு உரியவை என்றும் பாகுபாடுகள் இருந்தன. இதையெல்லாம் பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ எனக்குள்ளும் அந்தப் பாகுபாடு இருந்தது.
திருமணத்துக்குப் பின் எல்லாம் மாறியது. காரணம், பெண்ணும் சக மனுஷிதான் என்கிற புரிதல். வீட்டு வேலை செய்வது கௌரவக் குறைச்சல் என்கிற எண்ணம் இப்போது என்னிடம் இல்லை. வீடு பெருக்கித் துடைப்பது, பாத்திரம் துலக்குவது, தண்ணீர் பிடித்து வருவது, துணிகளைக் காயப்போட்டு மடித்து வைப்பது, இறால் மீன் சுத்தம் செய்வது (கடையில் பெரும்பாலும் இறாலின் தலையையும் மேற்புறத்தில் உள்ள கூட்டையும் மட்டுமே நீக்கித் தருவர். தூண்டில் நரம்பு அளவில் இருக்கும் குடலை நீக்க மாட்டார்கள்), காய்கறிகளை நறுக்குவது எல்லாம் என் வேலை.