தப்புக் கணக்கை நேர்செய்தேன் | ஆண்கள் ஸ்பெஷல்

தப்புக் கணக்கை நேர்செய்தேன் | ஆண்கள் ஸ்பெஷல்
Updated on
1 min read

எங்களுக்குத் திருமணமாகி 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றைய தலைமுறை போல் ‘90களின் குழவி’களான எங்களது வாழ்க்கை இருந்ததில்லை. காதலெல்லாம் கிடையாது. தூர நின்று பார்ப்பதோடு சரி.

வீட்டில் பெற்றோருக்குத் தெரிந்தால் வெளுத்துவிடுவார்கள் என்னும் அச்சத்தோடு வெட்கப்பட்டுக்கொண்டே விலகிச் சென்ற காலம் அது.

திருமணம் முடிந்து  தனிக்குடித்தனம் செல்வது காதலைவிடக் கடினம்.கூட்டுக் குடும்பத்தில்  கஷ்டத்தைச் சமாளித்து உருண்டு எழும் பெண்கள் எதிர்கால வாழ்வில் எதையும் சமாளிக்கும் மனப் பக்குவத்தையும் தைரியத்தையும் பெற்றிருந்தார்கள்.

வீட்டு வேலைகள் செய்வதில் எங்கள் வீட்டில் இரண்டு மருமகள்கள் இடையே அடிக்கடி போட்டா போட்டி நடக்கும். ஆளுக்கு ஒரு நாள் வேலை செய்யலாம் என அப்பா நாட்டாமையாக மாறி தீர்ப்பு கொடுத்தார். அதன்படி மனைவி சமையல் செய்யும் நாளில் சிறிதளவேணும் உதவலாம் என்கிற எண்ணம் எனக்கு இருந்தாலும், ‘ஆண்கள் உழைத்துப்போட மட்டும்தான். பெண்களுக்குச் சமையல் கட்டுதான்’ என்கிற அப்பாவின் இந்தக் ‘கம்பீர’ வார்த்தைகளால் மனைவிக்கு என்னால் உதவ முடியவில்லை.

மனைவியோ, “நீங்க போங்க. நான் பார்த்துக்கிறேன்” என்று ஒற்றை ஆளாகச் சமாளித்து முன்னேறினார் சமையலறையில். நான் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால் உணவு மேசையில் உணவைத் தயாராக வைத்திருப்பார். சில ஆண்டுகளுக்குப்  பிறகு தனிக் குடித்தனம் செல்லும் வாய்ப்பு எங்களுக்கு வாய்த்தது. அப்போதும்கூட என்னை வீட்டு வேலைகள் செய்ய மனைவி அனுமதிக்கவில்லை. அப்போது என் மனதுக்குள் நான் போட்ட தப்புக் கணக்கு, ‘துணி துவைக்க வாஷிங் மெஷின் இருக்கு. துவைத்துக் காயவைத்து மடிப்பது இலகுவான வேலை’ என்பதுதான். ஓரிரு வருடங்களில் என் மனைவிக்கு அறுவைசிகிச்சை நடந்ததால், ஆறு மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம்.

அப்போது வீட்டு வேலைகளை நானும் என் மகளும் பகிர்ந்துகொண்டோம். அப்போதுதான் புரிந்துகொண்டேன் வீட்டு வேலை என்பது எவ்வளவு கடினம் என்பதை. பாத்திரம் துலக்குவது, தேநீர் போடுவது, ரசம் வைப்பது என்று சில சமையல் கலைகளை அப்போது கற்றுக்கொண்டதால் விடுமுறை நாள்களிலும் ஓய்வு நேரத்திலும் மனைவிக்கு இயன்ற அளவு ஓய்வு அளித்து ஒத்தாசையாக இருந்துவருகிறேன்.

தற்போது தினமும் வீடு பெருக்கும் வேலை செய்யக்கூட நான் சளைப்பதில்லை. இதனால் மனைவிக்கு வேலைப்பளு குறைந்து நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

- ஏ.ஜி.முகம்மது தௌபீக், மேலப்பாளையம், திருநெல்வேலி.

தப்புக் கணக்கை நேர்செய்தேன் | ஆண்கள் ஸ்பெஷல்
அங்கீகரிக்கப்படாத ஆயிரம் வேலைகள் | பெண் கோணம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in