

‘உனக்கு வேலை மட்டுமே வேலை
எனக்கு வேலையும் ஒரு வேலை’
- இளம்பிறை
ஸ்வீடனின் காலநிலை - சுற்றுச்சூழல் அமைச்சர் ரொமினா பூர்மொக்தாரி தன் மூன்று மாதக் குழந்தையுடன் காலநிலை குறித்த ஐரோப்பிய ஒன்றியக் கூட்டத்தில் பங்கேற்றார். செய்தியாளர் சந்திப்பின்போது, “பெண்கள் குடும்பப் பொறுப்பேற்பது, பொதுவெளியில் பணிசெய்வது ஆகிய இரண்டில் ஒன்றைத்தான் தேர்வுசெய்ய முடியும் என்கிற நிலை மாற வேண்டும்; இரண்டிலும் அவர்களால் திறம்படச் செயலாற்ற முடியும் என்பதை உணர்த்தவே, இந்தக் கூட்டத்தில் குழந்தையுடன் கலந்துகொண்டேன்” எனக் குறிப்பிட்டார்.
பெற்றோர் இருவருக்கும் குழந்தையைப் பராமரிப்பதற்கான விடுப்பு அளிப்பது குறித்தும் குழந்தை வளர்ப்பைத் தாய், தந்தை இருவருக்குமான பொறுப்பாக உணரும் நவீன மனநிலை கொண்ட வாழ்க்கைத் துணை குறித்தும் அவருடைய பேச்சு அமைந்திருந்தது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் குழந்தையுடன் அவை நடவடிக்கைகளில், அரசியல் மேடைகளில் கலந்துகொள்வது பெரிதும் விமர்சிக்கப்பட்ட நிலையில், அலுவலின்போது குழந்தையை அரசுப் பணியாளர்களிடம் வைத்திருக்கச் சொன்ன செய்தி கடும் சர்ச்சையை எழுப்பியது.
பச்சிளம் குழந்தையைக் கூட்டமும் நெரிசலும் கொண்ட பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச்செல்ல வேண்டிய அவசியம் உண்மையாகவே அவருக்கு நடைமுறைச் சிக்கல் சார்ந்ததா? அரசு ஊதியம் பெறும் ஒருவருக்குக் குழந்தையைப் பேண உதவியாளரை ஏற்பாடு செய்ய முடியாதா? தாய்ப்பால் ஊட்ட வேண்டியது குழந்தையின் நலன் கருதியது; பிறந்த சில மாதங்களில் குழந்தைக்குத் தாயின் அரவணைப்பு அவசியம் என்றாலும், அதிகமான சத்தமும் வெளிச்சமும் நோய்த்தொற்றுக்கான சாத்தியங்களும் இருக்கும் பொதுநிகழ்வுகளில் குழந்தையை வைத்திருப்பது சரியான தேர்வாக இருக்க முடியுமா என்கிற விவாதத்தையும் பொதுவெளியில் காண முடிந்தது.