

பேருந்துக்காகக் காத்திருக்கையில் இரண்டு ஆசிரியர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்கும் சூழலில் இருந்தேன். “உறங்கி எத்தனையோ நாள்கள் ஆயிட்டு. எந்தப் பிக்கல் பிடுங்கலும் இல்லாமல் உறங்க ஆசையாயிருக்கு.” அவர்கள் உரையாடலின் சாரம்சம் என்னையும் சுட்டது.
அடிப்படைத் தேவையான உறக்கத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள் பெண்கள். பிறந்தகத்தோடு தங்கள் உறக்கத்தை இழந்த பெண்கள் ஆயிரமாயிரமாகத் தேறும். கல்யாணம் தனக்கு ஒரு பெருவாழ்வு என்று இல்லறத்தில் போய்ச் சேர்ந்தால் ஆசுவாசமான உறக்கம் இவர்களுக்குக் கிடைப்பதில்லை.
ஒரு பெண் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து, வீட்டில் உள்ள எல்லாருக்கும் சமைத்து, எல்லாரின் துணிமணிகளையும் அலவி (துவைத்து), எல்லாரும் உண்டு முடித்த எச்சில் பாத்திரங்களைக் கழுவி, எல்லாரும் வசிக்கும் வீட்டைச் சுத்தம் செய்து, வீட்டின் பொருளாதாரச் சிலுவையும் தோள்களில் விழுந்தபடியால் பிள்ளைகளுக்காக, கணவனின் குடும்பப் பொருளாதார மேம்பாட்டுக்கு ஏதோ ஒரு நிறுவனத்தில் காலை முதல் மாலை வரைக்கும் உழைக்கிறாள். அப்படியே சோர்வோடு வீட்டுக்குப் போகையில் எல்லாரும் கலைத்த வீட்டை ஒழுங்குபடுத்தி, எல்லாருக்குமான சேவைகளைச் செய்து முடித்தபின் நடு இரவில் படுக்கையில் போய் விழுகிறாள்.
அவளுக்கான ஒரு கோப்பைத் தேநீரை ஆசுவாசமாக உட்கார வைத்துக் கொடுக்க அவள் பெற்ற பிள்ளைகள்கூடப் பல குடும்பங்களில் இருப்பதில்லை. ‘எங்களுக்குச் சாப்பாடு தராம ஒன் பாட்டுக்கு உறங்குற? எங்க துணிகளைத் துவைக்காம ஒன் பாட்டுக்கு ஏன் சொகமா இருக்கிற?’ என்று கேட்கிற பிள்ளைகளும் உண்டு. ‘வீடு ஏன் இப்படிக் கிடக்கு? ஏன் துணிகள் கூடிக் கிடக்கு? ஏன் பாத்திரங்கள் கழுவாமப் போட்டிருக்க?’ - கட்டிய கணவனின் கேள்விகள் இவை.