

‘உழைக்கும் மகளிர்’ என்கிற வார்த்தையைக் குறிப்பிடும்போது ‘உழைக்காத மகளிர்’ உண்டா என்கிற சிந்தனை சிலருக்கு எழலாம். ‘வேலைக்குப் போகிற பெண்கள்’ பற்றிய கட்டுரை என்றும் சிலருக்குத் தோன்றலாம். ‘யாரெல்லாம் உழைக்கும் மகளிர்?’ என்கிற கேள்வியும் உருவாகலாம். சர்வதேச மகளிர் நாளைக் குறிப்பிடும்போதுகூட, ‘உழைக்கும் மகளிருக்கான நாள்’ என்றே குறிப்பிடுகிறோம் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
1917 மார்ச் 8 அன்று ரஷ்யாவில் பெண்களுக்குச் சம உரிமை, சம ஊதியம், பணிப் பாதுகாப்பு வேண்டும் என்று பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மகத்துவமான போராட்டம் ஜார் மன்னரின் அரசுக்கு எதிரான கிளர்ச்சிக்கு ஒரு முன்களமாக அமைந்தது.
அரசின் பெண் தொழிலாளர் விரோத போக்குக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் என்பதால் உழைக்கும் மகளிர், அதாவது தொழிற்சாலைகளில் பணிபுரிந்த பெண் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் என்பதால் இத்தகைய போராட்டங்களின் விளைவாக உருவான நாளை ‘உழைக்கும் மகளிருக்கான நாள்’ எனக் கொண்டாடுகிறோம். இந்தப் போராட்டங்களின் நோக்கங்களில் பெண்களின் வாக்குரிமையும் இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.