

நாட்டின் பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களில் நடைபெற்ற இளைஞர்களின் போராட்டங்களில், ஓரிடத்தில் மாணவர்களைக் கைதுசெய்து நகர்ந்த காவல் வாகனத்தை ஒரு பெண் தன் ஒற்றைக் கையால் மறித்து நின்றார். இந்தப் போராட்டங்கள் பலவற்றில் அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டபோதும்கூடத் தயக்கமும் அச்சமும் இன்றிக் காயங்களோடு பெண்கள் தொடர்ந்து ஈடுபட்டார்கள்.
இந்தக் காட்சிகளைப் பார்க்கிறபோது உருவாகிற உணர்வெழுச்சி நம்பிக்கையளிக்கிறது. அடிப்படை வசதிகள் இல்லாமல் செய்துவிட்டால், போராட்டக் களங்களில் இருந்து பெண்கள் பின்வாங்கிவிடுவார்கள் என்கிற கணிப்புப் பொய்த்துப்போனது.
பெண்ணின் பேராற்றல்: பெண்ணுக்கு இன்று வசப்பட்டிருக்கும் சுதந்திரத்துக்குப் பின்னிருக்கும் போராட்டங்களை இந்தத் தலைமுறையினருக்கு ந உணர்த்தத் தவறிவிட்டோம். நவீனப் பெண்ணுக்குக் கிடைத்திருக்கும் சமூக அரசியல் அறிவு குறித்த கேள்வி நம்முன் எழுகிறது.
நம்மைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் எண்ணற்ற சமூகச் சிக்கல்கள் குறித்து அறிந்துகொள்ளும் முனைப்புக்கூட இல்லாத, சமூக வலைத்தளங்களில் மூழ்கி அவை கொண்டிருக்கும் சித்தரிப்புகளே உண்மை என நம்பி வாழும் ஒரு தலைமுறையாக வாழ்ந்துகொண்டிருப்பதுதான் இன்றைக்குப் பெரும் பின்னடைவைத் தந்திருக்கிறது.
ஆங்கிலேயர்களை எதிர்த்துத் தென் ஆப்ரிக்காவில் வாழ்ந்த இந்தியர்கள் நடத்திய இன உரிமைப் போராட்டத்தில் அச்சமின்றி காந்தியுடன் முன் நின்ற தில்லையாடி வள்ளியம்மை, சேற்றினை அள்ளி வீசிய சமூகத்தில் மனம் தளராது பெண்களுக்கான கல்விப் பணியாற்றிய சாவித்ரிபாய் பூலே, கூந்தலை வெட்டி அவமானப் படுத்திவிட்டதாக நினைத்தவர்களின் முன்பு கிராப் வைத்துக்கொண்டு போராட்டக்களத்துக்கு மீண்டும் வந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் போன்ற எண்ணற்ற பெண்கள் நம் சமூகத்தில் பெண் ஆற்றல் எளிதில் தோற்றுவிடாது என்பதற்குச் சான்றாக நிற்கிறார்கள்.