

கடந்த வாரம் 1,600 மீட்டர் தொலைவுக்கு வெறுங்கால்களில் சேலை அணிந்தவாறு ஓடிச் சாதனை படைத்த கவிதா குமாரியைப் பற்றிய செய்தி, ஊடகங்களில் கவனம் பெற்றது. ஜார்க்கண்ட்டின் ராம்கர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கான 284 பணியிடங்களில் 50% பெண்களுக்காகவும் கைம்பெண்கள், விவாகரத்துப் பெற்ற பெண்களுக்குக் கூடுதலாக 5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கான உடல்தகுதித் தேர்வில் பங்கேற்ற கவிதா குமாரி, பத்து நிமிடங்களில் கடக்க வேண்டிய தொலைவை எட்டு நிமிடங்களில் கடந்தார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் கணவரை இழந்த கவிதா, குடும்பப் பொறுப்பை ஏற்றார். செங்கல்சூளையில் வேலைபார்த்து இரண்டு குழந்தைகளையும் மாமனார் மாமியாரையும் பராமரித்துவருகிறார். பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக ஊர்க்காவல் படைப் பணியில் சேர விரும்பி தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இரு வேறு வாழ்க்கை: தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தலைச் சேர்ந்த பேச்சியம்மாளுக்கு 20 வயதில் திருமணம் நடைபெற்றது. ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 15 நாள்களில் கணவர் இறந்துவிட, கிடைத்த சிறுசிறு வேலைகளைச் செய்து குழந்தையைக் காப்பாற்றிவந்தார்.
பணிக்குச் சென்ற இடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொண்ட பேச்சியம்மாள், அந்த ஊரை விட்டு வேறு ஊருக்குச் சென்றார். வேட்டி - சட்டை அணிந்து, முடியை வெட்டி, கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து ஓர் ஆணாகவே தோற்றத்தை மாற்றி, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அதே தோற்றத்தில் வாழ்ந்துவருகிறார். இப்போது மகளுக்குத் திருமணம் செய்துவிட்டார். தேநீர்க் கடைகளிலும் பரோட்டா கடைகளிலும் வேலைசெய்துவந்த அவர், ‘முத்து மாஸ்டர்’ என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார்.