மனிதர்கள் மகத்தானவர்களா, ஆபத்தானவர்களா? | என் பாதையில்

மனிதர்கள் மகத்தானவர்களா, ஆபத்தானவர்களா? | என் பாதையில்
Updated on
2 min read

ஜெயமோகன் எழுதிய ‘அறம்’ சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன். சமூகத்தில் பலருக்கும் தெரியாத பல ஆளுமைகள் குறித்த தகவல்களையும், முந்தைய காலச் சமூக அவலங்களையும் சிறுகதைகளாகப் படம் பிடித்துக் காட்டியிருந்தார். வனத்தில் பணியாற்றிய கால்நடை மருத்துவர் ஆர். கிருஷ்ணமூர்த்தி குறித்த ’ யானை டாக்டர்’ என்கிற புனைகதையில் காட்டில் யானைகள் மனிர்களால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்று கூறும் வரிகள் என்னை மிகவும் பாதித்தன.

‘மனிதனின் கீழ்மைகளை ஒவ்வொரு நாளும் முகத்தில் அறைந்தது போல் பார்க்க வேண்டும் என்றால், நீங்கள் காட்டில் இருக்க வேண்டும். அநேகமாக இங்கே சுற்றுப்பயணம் வருபவர்கள், படித்தவர்கள்,  பதவிகளில் இருப்பவர்கள், ஊரில் இருந்து வறுத்த, பொரித்த உணவு வகைகளுடனும் மது குப்பிகளுடனும்தான் வருவார்கள். வரும் வழிதோறும் குடித்துக்கொண்டும் தின்றுகொண்டும் இருப்பார்கள்.

என்னால் எத்தனை யோசித்தாலும் புரிந்துகொள்ள முடியாத விஷயம் காலி மதுக் குப்பிகளை ஏன் அத்தனை வெறியுடன் காட்டுக்குள் வீசி எறிகிறார்கள். என்னால் காட்டுச் சாலை இருபக்கமும் குப்பிச் சில்லுகள் குவிவதைத் தடுக்கவே முடிவதில்லை. மற்ற எந்த விலங்கை விடவும் யானைக்கு மிக அபாயகரமானது அந்தக் குப்பி உடைசல். யானையின் அடிக்கால் ஒரு மணல் மூட்டை போன்றது.  குப்பிகள் அநேகமாக மரத்தில் மோதி மரத்தடியிலே கிடக்கும்.

யானை அதன் மகத்தான எடையுடன் அதன் மேல் கால் வைத்தால், குப்பி நேராக அதன் பாதங்களுக்குள் முழுக்கப் புகுந்துவிடும். இருமுறை அது காலை தூக்கி வைத்தால் நன்றாக உள்ளே செல்லும். அதன் பின்னால் யானை நடக்க இயலாது. இரண்டே நாள்களில் காயம் சீழ் வைக்கும். புழுக்கள் உள்ளே நுழையும். புழுக்கள் சதையைத் துளைத்து சீழை உள்ளே கொண்டு செல்லும்.

முக்கியமாகக் குருதிப்பாதைகளையோ எலும்பையோ அவை தொட்டுவிட்டது என்றால் அதன் பின் யானை உயிருடன் எஞ்சாது. வீங்கிப் பெருத்த சீழ் வழியும் கால்களுடன் யானை பல நாள்கள் அலையும்...’ என்று தொடங்கி, ‘மனிதனைவிட 170 மடங்கு அதிக நியூரான்கள் உள்ள மூளை கொண்ட காட்டின் பேரரசன் வெறும் வெள் எலும்புகளாக மண்ணில் எஞ்சுவான்’ என்று அந்தப் பத்தி முடியும்.

வாசித்து முடித்தபோது மனம் பதறிவிட்டது. மனிதனின் பொழுதுபோக்குகள், எவ்வளவு கொடுமை. வீசி எறியும் மதுக் குப்பி எப்படி ஒரு மகத்தான உயிரை காவு வாங்குகிறது என்பதை மிக நுட்பமாகக் கதையில் எடுத்துக்காட்டி இருப்பார் ஜெயமோகன். காட்டின் குளுமைக்காகவும் அருவியில் குளிப்பதற்காகவும் குழுவாகச் செல்லும் நண்பர்களில் மதுக் குப்பிகளை எடுத்துச் செல்லாமல் இருக்கும் நபர்கள் எத்தனை பேர். தாங்கள் வீசி எறியும் அல்லது அங்கே விட்டுவிட்டு வரும் மதுக் குப்பிகளால் எத்தனை உயிர்கள் பாதிக்கப்படுகின்றன என்பதை இவர்கள் உணர்வார்களா?

சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் இக்காலத்தில் புதிய புதிய இடங்களைத் தேடி அல்லவா செல்கிறார்கள் மக்கள். வனப்பகுதிக்குள் நுழையும் வாகனங்களில் வாகனப் பரிசோதனை தீவிரமாக நடத்தப்பட வேண்டும். மக்களும் தாங்கள் எடுத்துச்செல்லும் குப்பிகள், பிளாஸ்டிக் பொருள்களை வண்டியிலேயே திரும்ப எடுத்துவந்து,  ஊருக்குள் உள்ள குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும்.

- வி.ஜெயஸ்ரீ, தக்கலை, கன்னியாகுமரி.

மனிதர்கள் மகத்தானவர்களா, ஆபத்தானவர்களா? | என் பாதையில்
காற்றில் மிதக்கும் இறகானேன் | வாசிப்பை நேசிப்போம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in