

மூன்று பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை உள்ள நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் நான் மூன்றாவது பெண். எனக்கும் சின்ன அக்காவுக்கும் நான்கு வயது வித்தியாசம். நாங்கள் அரசுப் பள்ளியில் படித்தோம். பெரிய அக்கா எட்டாம் வகுப்புவரை படித்து விட்டு அம்மாவுக்கு உதவியாக இருந்தார்.
இரண்டாவது அக்கா படிப்பில் ஆர்வம் உடையவர். பேச்சுப்போட்டியில் பங்கேற்றுப் பல பரிசுகளைப் பெறுவார். என்னையும் போட்டிகளில் பங்குபெற வைத்தார். பெண் பிள்ளைகள் படித்தால் அதற்கு ஏற்ற வரன் பார்க்க வேண்டும் என்று அவரைப் பத்தாம் வகுப்போடு அப்பா நிறுத்திவிட்டார். அவர் மிகுந்த வேதனை அடைந்தார். தட்டச்சு, தையல், கணினிப் பயிற்சி பெற்று, தட்டச்சுப் பயிற்றுநராக இருந்தார்.