

என் பாட்டி சுப்புலட்சுமி அறியாமையும் ஏழ்மையும் போட்டி போட்டுக் குடியிருந்த வாழ்க்கைச் சூழலில் பிறந்து வாழ்ந்தவர். வறுமையால் கல்வியைத் தொடர முடியாத நிலையில் இளம் வயதிலேயே திருமணமும் அவருக்கு நடந்தது. தாத்தாவுக்கு நிரந்தரப் பணி இல்லை. பாட்டிக்குத் தபால் அலுவலகத்தில் வேலை கிடைத்தது.
கைக்குழந்தையைப் பராமரிக்க முடியாததால், அந்த வேலையைப் பாதியிலேயே அவர் இழக்க நேர்ந்தது. வறுமை வாட்ட, தன் இரண்டு மகள்களையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டுக் கட்டிட வேலைக்குச் சென்றார். மேஸ்திரியின் கொச்சையான பேச்சு அவரது சுயமரியாதையைச் சீண்ட, அந்த வேலையை விட்டுவிட்டு மருத்துவமனைக்கு வேலைக்குச் சென்றார். அங்கு தனக்குத் தரப்பட்ட பணி தவிர்த்துக் கழிவறைகளைத் தூய்மைப்படுத்தச் சொன்னதால் அந்த வேலையையும் துறந்தார்.
வீட்டின் பசியை விரட்ட வேண்டுமே. அப்போது வீட்டிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் இருந்த மேட்டுப்பாளையம் வனக் கல்லூரியில் தற்காலிக வேலை கிடைத்தது. பேருந்துக்குப் பணம் இல்லாத நாள்களில் நடந்தே வேலைக்குச் சென்று திரும்புவார். தாத்தா வெளியூர்களிலேயே அதிகம் இருந்ததால் முக்கியமான முடிவுகளைப் பாட்டியே எடுக்க வேண்டிய சூழல்.
இளம் வயதிலேயே அம்மாவுக்கும் சித்திக்கும் வந்த திருமண வரன்களைப் பேச்சு நிலையிலேயே தவிர்த்து, அவர்கள் தொடர்ந்து படிக்க ஊக்கம் கொடுத்தார் பாட்டி. அதன் விளைவாக அம்மா வழக்கறிஞராகவும் சித்தி அரசு அலுவலராகவும் உயர்ந்தனர். தபால் நிலைய வேலையைத் தக்க வைக்க முடியவில்லையே என்று வருந்திய பாட்டி, என் அம்மா போட்டித் தேர்வுகளில் பங்கெடுத்தபோது உடன் வந்திருந்து எங்களைப் பார்த்துக்கொண்டார். அதன் விளைவாக அம்மா குரூப் 1 முதல் நிலைத்தேர்வில் வெற்றிபெற்றார்.
இப்போது பாட்டி வறுமையை வென்றுவிட்டார். தொலைக்காட்சித் தொடர்களில் தொலைந்துவிடாமல் வாசிப்பை நேசிக்கிறார். தன் வேலையைவிடக் குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம் என முடிவெடுத்தவர், பெண்களுக்குத் திருமணத்தைவிடக் கல்வி முக்கியம் என முடிவெடுத்தவர் பாட்டி. பசி எனும் பெரும்புயல் சுயமரியாதைச் சுடரை அணைக்காமல் பார்த்துக்கொண்டவர். அறுபது வயதைக் கடந்தாலும் சுயமாக உழைத்து உண்டு, பிறருக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறார் என் பாட்டி!
- இலக்கணா, சென்னை.