

என் அத்தை காளியம்மாள் ஆண் துணை இல்லாமல் தான் சந்தித்த இன்னல்களில் இருந்து மீண்டு மரியாதைக்குரிய வாழ்க்கையை வாழ்ந்தவர். அதற்குக் காரணமான அவரின் சுயமரியாதையும் துணிச்சலும் உழைப்பும் எங்களுக்கு வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் அர்த்தமுள்ளதாக, அன்போடும் நம்பிக்கையோடும் வாழ வழிகாட்டுகின்றன.
தான் பிறந்த போத்தனூர் கோணவாய்க்கால் பாளையம் கிராமத்தில் தொடக்கக் கல்வியை முடித்தார். நடுநிலைப் பள்ளி நஞ்சுண்டாபுரத்தில் இருந்தது. ஆள் நடமாட்டம் இல்லாத இடுகாடுகள் சூழ்ந்த ஒற்றையடிப் பாதைதான் பள்ளிக்குச் செல்ல வழி. அவ்வழியே செல்ல அஞ்சி தொடக்கக் கல்வியோடு அந்தக் கிராமத்தில் மாணவர்கள் நின்றுவிட, ஒரே ஒரு தோழியோடு அந்தப் பாதை வழியே தொடர்ந்து சென்று எட்டாம் வகுப்பை அவர் முடித்தார். பிறகு வெளியூரில் இருந்த உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று படித்தார். திருமணமாகி இரண்டு குழந்தைகளின் மழலைப் பருவம் மாறுவதற்குள் கணவர் இறந்துவிட, அவரின் மகிழ்ச்சி மங்கியது.
கிடைத்த சிறுசிறு வேலைகளைச் செய்து வாழ்ந்தாலும் உடன்பிறந்தவர்களைச் சார்ந்தே வாழவேண்டிய நிலையை அவர் விரும்பவில்லை. தனியார் மருத்துவமனைகள் இல்லாத அந்தக் காலத்தில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அத்தைக்கு வேலை கிடைத்தது. கடைநிலை வேலை என்பதால் விடுமுறை வெகு அரிது. 16 மணி நேரம் கடுமையாக உழைக்க வேண்டிய நிலை. இருந்த போதும் சார்பு நிலையிலிருந்து சுயத்தை நோக்கித் தன்னை நகர்த்திய அந்த வேலையை அவர் நேசித்தார். அருகில் உறவுகள் இல்லாததால் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்வரை தன்னுடனே அழைத்துச் செல்வார்.
பிரேத பரிசோதனைக் கூடத்துக்கு அருகில் உள்ள மரத்தில் மூடநம்பிக்கைகளின் முடிச்சை அவிழ்த்து, தன் குழந்தைக்கு அவர் தொட்டில் கட்ட, அறிவின் தலைமுறையை ஆட்டும் தொட்டிலாக அது இருந்தது. 37 வருடப் பணி அனுபவத்தில் இளநிலை உதவியாளராகப் பதவி உயர்வு அடைந்து பணி நிறைவு பெற்றார். அதற்குப் பிறகு தையல் பயிற்சி பெற்று அதிக நுட்பம் தேவைப்படாத அளவில் தையல்தொழிலைச் செய்துவருகிறார்.
தன் மகன்களின் கல்வி, திருமணம் சார்ந்த தேர்வுகளில் அவர்களின் விருப்பம் சார்ந்தே முடிவெடுத்தார். பெண் வீட்டாரிடம் வரதட்சிணை உள்ளிட்ட எந்த நிபந்தனைகளையும் அவர் விதிக்கவில்லை. என் கர்ப்ப, மகப்பேறு காலங்களில் மரபுகள், சம்பிரதாயங்களைக் கடந்த அவரின் பங்களிப்பும் பராமரிப்பும் மகத்தானவை.
‘ரெண்டாவதும் பொண்ணா போச்சே’ என்று என்னிடம் அங்கலாய்த்தவர்களிடம் அவர் காட்டிய கடுமையும், பெண் குழந்தைகளிடம் காட்டிய கனிவும் என்னைக் கவர்ந்த குணங்கள். அறத்துக்கு அப்பாற்பட்டவர்களை அவர்கள் எப்படிப்பட்ட ஆளுமையாக இருந்தாலும் தன் எதிர்ப்பை உணர்த்துவார்.
தான் படித்த பள்ளி, தன்னுடன் பயணித்த பள்ளித்தோழியைப் பார்க்க வேண்டும் என்றார். குடும்பமாக அதே பாதையில் பயணம் செய்து பள்ளியை அடைந்தபோது, “இந்தப் பள்ளிக்கூடம்தான் எனக்கு வாழ்க்கையைத் தந்தது” என்று கண் கலங்கினார். அவருடன் சேர்ந்து நடந்த தோழியைச் சந்தித்தோம். எங்களிடம், “ஆண் பிள்ளைங்ககூடப் பத்தாம் வகுப்பு படிக்காத இந்தக் கிராமத்துல காளியம்மாதான் முதன் முதலா பத்தாங்கிளாஸ் போனதால ஊர் மேடையில பாராட்டி பரிசு கொடுத்து கௌரவிச்சாங்க” என்கிற அந்த ஒரு வாக்கியத்தில் நூறு உணர்வுகளின் தாக்கம் எங்களுக்கு. பெண்களாக இருந்தால் என் அத்தையைப் போலத்தான் இருக்க வேண்டும்!
- யசோதா சரவணன், சென்னை.