அன்பால் வென்ற அம்மத்தா! | ஆயிரத்தில் ஒருவர்

அன்பால் வென்ற அம்மத்தா! | ஆயிரத்தில் ஒருவர்
Updated on: 
1 min read

வேலைக்குச் செல்லும் அம்மாவின் பிள்ளைகளான எங்களைப் பசியே அறியாமல் வளர்த்தவர் எங்கள் அம்மத்தா, மாராத்தாள். பத்துப் பேரன், பேத்திகள், மக்கள், மருமக்கள், சொந்தங்கள் என அனைவரையும் ஓர் ஆலமரம்போல் அன்பினால் அரவணைத்தார்.

கல்வி, வாசிப்பு, பன்னாட்டு நிறுவனத்தின் பணி அனுபவம் ஆகியவற்றை எல்லாம் கொண்டு நாங்கள் பெற முடியாததை அம்மத்தா இயல்பிலேயே பெற்றிருந்தார். எந்தவொரு சூழ்நிலையிலும் தவறுதலாகக்கூட ஒரு கடுஞ்சொல் பேசியதில்லை. கோபமாக யாராவது திட்டினாலும், மெல்லியச் சிரிப்புடன் அதை ஏற்றுக்கொள்வார். எதற்காகவும் ஒரு புகார் கூறியதில்லை; எதற்கும் ஆசைப்பட்டதும் இல்லை.

அம்மத்தாவின் உறுதி நம்மை மலைக்க வைக்கும். அவருடனான என் 38 ஆண்டுப் பயணத்தில் அவர் அழுது நான் பார்த்தது ஒரே ஒரு முறைதான். எழுதப் படிக்கத் தெரியாதவர். தன் பிறந்தநாள்கூட அவருக்குத் தெரியாது. அந்தக் காலத்தில் ஆண் குழந்தைகளின் பிறந்தநாளை மட்டுமே குறித்து வைத்துக்கொள்வார்களாம். அதேநேரம், அவர் கற்றிருந்ததோ எங்கள் எவராலும் கற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அது, சுயநலமற்ற அன்பின் மொழி!

அடிக்கடி முன்கோபப்பட்டுப் பேசிவிடும் எங்கள் அப்புச்சியைக்கூட அவர் கடிந்து ஒரு சொல் சொன்னதில்லை. முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட அவரை 12 ஆண்டுகள் நன்றாகக் கவனித்துக்கொண்டார். அம்மத்தாவின் பதினாறாம் நாள் காரியத்தின்போது, “இட்லியைத் தட்டில் போட்டு அது சுடும்னு இன்ன வரைக்கும் பிச்சுத்தான் வைப்பா...” என்று கூறி எங்கள் அப்புச்சி தாங்க முடியாமல் அழுதார்.

அம்மத்தாவின் வீட்டுக்குச் சென்ற எவரும் எதுவும் உண்ணாமல் திரும்பியதில்லை. எப்போதும் அதிகமாகவே சமைத்து வைக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. அதற்கு எங்கள் அப்புச்சியும் துணைநின்றார். ஒருகாலத்தில், அவர்களுடைய அண்டா பட்டறையில் வேலை பார்த்தவர்களுக்கும் உணவு சமைத்திருக்கிறார்கள்.

90 வயதை நெருங்கியபோதும், பார்வை மங்கிய நிலையிலும், சமைத்து, தன்னால் இயன்ற வேலைகளைச் செய்து எங்கள் அப்புச்சியையும் கவனித்துக்கொண்டார். கடைசி இரண்டு மாதங்கள் மட்டுமே அவரால் வேலை செய்ய முடியவில்லை.

எந்தவொரு நிலையிலும் தன் கவலைகளைப் பற்றிப் புலம்பாமல், அடுத்தவரின் கவலைகளைப் புரிந்துகொள்பவராகவும் அவர்களுக்கு ஆறுதல் அளிப்பவராகவும் இருந்தார். சூழ்நிலை காரணமாக, ஒரு பணியாளரை நியமித்துத்தான் அவரைப் பார்த்துக்கொண்டோம்.

இத்தனை பேர் இருந்தும் தன்னை யாரும் பார்த்துக்கொள்ளவில்லை என்று எங்களிடம் குறைபட்டுக்கொண்டதில்லை. மாறாக, தன்னைப் பார்த்துக்கொண்ட பணியாளருக்குத் தன்னால் சிரமம் ஏற்படுகிறது என்று சொல்லிச் சொல்லி வருத்தப்படுவார்.

தன் வாழ்க்கையின் மூலம் அவர் எங்களுக்குச் சொல்லிவிட்டுப் போனது ஒரு முக்கியமான பாடம் : ‘அதிகாரத்தைச் செலுத்தி எவரையும் அந்நொடியில் வென்றுவிடலாம். அன்பைச் செலுத்தினால் வாழ்க்கை முழுவதும் அவர்களை வென்று கொண்டே இருக்கலாம்.’ - நித்யா சாமிநாதன், திருப்பூர்.

அன்பால் வென்ற அம்மத்தா! | ஆயிரத்தில் ஒருவர்
கதை எழுதும் மாணவர்கள் | வாசிப்பை நேசிப்போம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in